சூர்யவன்ஷியின் சூரசம்ஹாரம்.. ஒரே இன்னிங்ஸில் 9 சிக்சர்கள்! முதல் இந்திய யு19 வீரராக சாதனை!
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சூர்யவன்ஷி என்ற பெயர் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டது பேசுபொருளாக மாறியது.
13 வயது பையனுக்கு 1 கோடி விலையா? ஐபிஎல் போன்ற தலைசிறந்த லீக் தொடரில் வந்து அவர் என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வியும் விமர்சனமும் வைக்கப்பட்டது.
ஆனால் பங்கேற்ற முதல் போட்டியில் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பி எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் லீக்கில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சிதறடித்து சதம் விளாசி எல்லோரையும் வாயடைக்க வைத்தார்.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் யு19 அணியில் இடம்பெற்றிருக்கும் சூர்யவன்ஷி, தன்னுடைய பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளை உடைத்து வருகிறார்.
ஒரு இன்னிங்ஸில் 9 சிக்சர்கள்..
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய யு19 அணி, இங்கிலாந்து யு19 அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
5 ஒருநாள் போட்டிகள் நடந்துவரும் சூழலில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்ற நிலையில் 3வது போட்டி நேற்று நடைபெற்றது.
கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டி மழை காரணமாக 40 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவரில் 268 ரன்கள் சேர்த்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடினார். 20 பந்தில் அரைசதமடித்து அசத்திய அவர், 31 பந்தில் 9 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்து 277 ஸ்டிரைக் ரேட்டில் 86 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடைய அபாரமான ஆட்டத்தால் 34.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய யு19 அணி அபார வெற்றியை பதிவுசெய்தது.
வைபவ் சூர்யவன்ஷி படைத்த 2 சாதனைகள்..
இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 9 சிக்சர்கள் அடித்த சூர்யவன்ஷி, இந்திய யு19 அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்தார். இதற்கு முன்பு ஒரு இன்னிங்ஸில் 8 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
மேலும் 20 பந்தில் அரைசதமடித்த சூர்யவன்ஷி, 18 பந்தில் அரைசதமடித்த ரிஷப் பண்ட்டுக்கு பிறகு அதிவேகமாக அரைசதமடித்த 2-வது இந்திய யு19 வீரராகவும் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.