கரீபியன் பிரீமியர் லீக் FINAL| 5வது முறையாக கோப்பை வென்று ’டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்’ வரலாறு!
13வது கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று நடைபெற்றது. 6 அணிகள் பங்கேற்ற தொடரில் சிறப்பாக செயல்பட்ட டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
5வது டைட்டிலை தட்டிச்சென்றது டிரின்பாகோ..
பரபரப்பாக தொடங்கிய இறுதிப்போட்டியில் இம்ரான் தாஹீர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. டிரின்பாகோவின் அற்புதமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத கயானா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய சௌரப் நேத்ராவல்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணியும் சுமாரான தொடக்கத்தையே பெற்றது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து டிரின்பாகோ தடுமாற, 3 சிக்சர்களை அடித்த கிரன் பொல்லார்டு முக்கியமான ரன்களை எடுத்துவந்தார்.
7 விக்கெட்டுகளை டிரின்பாகோ இழந்தாலும் கடைசியாக வந்த அகீல் ஹொசனை 7 பந்தில் 16 ரன்கள் அடித்து வெற்றியை எளிதாக்கினார். இதன்மூலம் கரீபியன் பிரீமியர் லீக் வரலாற்றில் 5வது முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது டிகேஆர் அணி.