SAvsAUS | பேட்டிங், பௌலிங் என அரையிறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய டிராவிஸ் ஹெட்!

"நான் இந்த உலகக் கோப்பையின் ஒரு அங்கமாக இருப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்காக என் பங்களிப்பைக் கொடுக்கவேண்டும் என்று காத்திருந்தேன்" - டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்pt web

அரையிறுதி 2: தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா

முடிவு: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

தென்னாப்பிரிக்கா: 212 ஆல் அவுட் (49.4 ஓவர்கள்)

ஆஸ்திரேலியா: 215/7 (47.2 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: டிராவிஸ் ஹெட்

MOM பேட்டிங்: 48 பந்துகளில் 62 ரன்கள் (9 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள்)

MOM பௌலிங்: 5-0-21-2

பந்துவீச்சு

ஆரம்ப ஓவர்களில் படுமோசமாக விளையாடியிருந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, ஹெய்ன்ரிச் கிளாசன் - டேவிட் மில்லர் கூட்டணி பெரும் நம்பிக்கை கொடுத்தது. இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டாலும் தேவையான நேரங்களில் பௌண்டரிகள் அடித்து ரன்ரேட்டையும் கொஞ்சம் உயர்த்திக்கொண்டிருந்தனர். எங்கு ஆட்டம் கையை விட்டு போய்விடுமோ என்று நினைத்த கம்மின்ஸ், ஆடுகளம் நன்கு சுழலுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால், டிராவிஸ் ஹெட்டை பந்துவீச அழைத்தார். ஆனால் அது எதிர்பார்த்ததைப் போல் தொடங்கவில்லை. பார்ட் டைம் பௌலர்களை எதிர்கொள்வதைப் போலவே அவரை அணுகினார் கிளாசன்.

முதல் பந்தை ஃபோருக்கு அனுப்பியவர், அடுத்த பந்தையும் விளாசினார். முதலிரு பந்துகளில் எட்டு ரன்கள் எடுக்கப்பட்டன. ஆனால் ஹெட் அசரவில்லை. ஸ்டம்ப் லைனில் சரியாக பந்துவீசினார். அதற்குப் பலனாக நான்காவது பந்தில் மிகப் பெரிய கிளாசனின் விக்கெட் கிடைத்தது. நேராக வந்த பந்தை சரியாகக் கணிக்காமல் போல்டானார் கிளாசன். ஆஸ்திரேலிய ரசிகர்கள் அந்த விக்கெட்டின் வீழ்ச்சியைக் கொண்டாடி முடிப்பதற்குள்ளாகவே இன்னொரு விக்கெட்டும் விழுந்தது.

கிளாசன் அவுட்டான அடுத்த பந்திலேயே பந்தின் சுழலைக் கணிக்காமல் எல்பிடபுள்யூ ஆனார் யான்சன். தன் முதல் ஓவரிலேயே தென்னாப்பிரிக்காவின் இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் நம்பிக்கையூட்டினார் ஹெட். அடுத்த 4 ஓவர்களில் அவர் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும், 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மில்லர் அதிரடி காட்டாமல் இருக்கக் காரணமாகவும் அமைந்தார்.

பேட்டிங்

ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இந்தப் போட்டியில் ரன் எடுக்கத் தடுமாறிய நிலையில், இரண்டே பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் இவ்வாட்டத்தில் 100+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருந்தார்கள். டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட். இந்தக் கூட்டணி இந்த ஆடுகளத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் ஆடியது. ஆறே ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தனர். ஆரம்பத்தில் ஹெட் அவ்வளவு அதிரடியாக ஆடவில்லை. முதல் 4 ஓவர்களில் 12 பந்துகள் சந்தித்திருந்த அவர், 9 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதன்பிறகு அவரது ஆட்டம் மொத்தமாக மாறியது.

யான்சன் வீசிய ஐந்தாவது ஓவரில் 2 ஃபோர்கள், ரபாடா வீசிய அடுத்த ஓவரில் 1 சிக்ஸர் விளாசினார். வார்னர், மார்ஷ் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்திருந்தபோதும் ஹெட் தன் ஆட்டத்தைத் தொடர்ந்தார். கோட்ஸி வீசிய 12வது ஓவரில் அடுத்தடுத்து 3 ஃபோர்கள் பறக்கவிட்டார். அதன்மூலம் 40 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தையும் கடந்தார். தொடர்ந்து நன்றாகவே ஆடிய அவர், கேஷவ் மஹராஜ் பந்தை சரியாகக் கணிக்காமல் போல்டானார். அவருடைய அந்த பெரிய இன்னிங்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணி இன்னும் பெரிய சிக்கலில் விழுந்திருக்கும்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"இன்று நடந்ததையெல்லாம் முழுதாக நினைத்துப் பார்ப்பதே கடினமானது. ஒரு அட்டகாசமான ஆட்டத்துக்கு பரபரப்பான முடிவு கிடைத்திருக்கிறது. இந்த ஆடுகளம் எப்படி இருக்கப்போகிறது என்று நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். மூன்று, நான்கு தினங்கள் இங்கு இருந்திருப்பதால், தூங்கும்போது கூட அதைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம். நான் இந்த உலகக் கோப்பையின் ஒரு அங்கமாக இருப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்காக என் பங்களிப்பைக் கொடுக்கவேண்டும் என்று காத்திருந்தேன்.

கிளாசனுக்கு நான் வீசிய பந்தைவிட நேராக எதுவும் வீச முடியுமா தெரியவில்லை. அது எப்படி அப்படிச் சென்றது என எனக்கே தெரியவில்லை. அந்த ஆடுகளத்தைப் பார்த்த பிறகு ஒருசில ஓவர்கள் பந்துவீசுவதற்குத் தயாராகவே இருந்தேன். பேட்டிங்கைப் பொறுத்தவரை எதிரணியை அட்டாக் செய்வதில் எப்போதுமே ஆர்வமாக இருந்திருக்கிறேன். பாசிடிவாக ஆட்டத்தை அணுகி ரன்ரேட்டை அதிகப்படுத்துவது எங்கள் நோக்கமாக இருந்திருக்கிறது. நான் அவுட் ஆன விதம் சற்று ஏமாற்றமாகவே இருந்தது. அது எனக்கான மேட்ச் அப். ஆனால் சரியாகக் கையாளாமல் விட்டுவிட்டேன். இந்திய அணியின் பந்துவீச்சு மிக அற்புதமாக இருக்கிறது. உலகக் கோப்பையின் சிறந்த அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை"

- டிராவிஸ் ஹெட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com