2024 ரஞ்சி கோப்பை: அட்டகாசமான செயல்பாடுகள்.. முதல் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்கள்!

2024 ரஞ்சிக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் பல வீரர்கள் தங்களுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள்
ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள்PT

2024 ரஞ்சிக் கோப்பை தொடர் கடந்த வாரம் தொடங்கியது. முதல் சுற்றிலேயே பல அட்டகாசமான செயல்பாடுகளையும், அதிர்ச்சிகரமான முடிவுகளையும் பார்க்க முடிந்தது. தமிழ்நாடு அணி தங்கள் முதல் போட்டியில் குஜராத்துக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது. பாண்டிச்சேரி அணியோ டெல்லி வீழ்த்தி பெரும் அதிர்ச்சி கொடுத்தது. சீனியர் இந்திய வீரர் சடேஷ்வர் புஜாரா இரட்டைச் சதம் அடித்து மிரட்டினார். பல இளம் வீரர்களும் நல்ல பெர்ஃபாமன்ஸை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுள் சிறப்பாக செயல்பட்ட ஒரு 5 வீரர்களின் பட்டியல் இங்கே

குமார் கார்த்திகேயா (மத்திய பிரதேசம்)

குமார் கார்த்திகேயா
குமார் கார்த்திகேயா

தன் நல்ல ரஞ்சி ஃபார்மை இந்த சீசனிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் குமார் கார்த்திகேயா. உத்திரகண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மத்திய பிரதேச அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார் இந்த இடது கை ஸ்பின்னர். இவரது பந்துவீச்சில் தடுமாறிய உத்திரகாண்ட் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கார்த்திகேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்த 192 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது உத்திரகாண்ட். 131 ரன் முன்னிலையோடு அடுத்த இன்னிங்ஸை ஆடிய மத்திய பிரதேசம் 243/3 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இம்முறை மத்திய பிரதேச பேட்ஸ்மேன்கள் நன்கு போராடினார்கள். குமார் கார்த்திகேயா, சரான்ஷ் ஜெய்ன் ஆகியோரைத் தவிர்த்து வேறு யாரும் பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்கவில்லை. இந்த இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் கார்த்திகேயா. 40 ஓவர்கள் பந்துவீசி ஓரளவு அந்த அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார் கார்த்திகேயா.

சுமித் சிங் (சிக்கிம்)

சுமித் சிங்
சுமித் சிங்

மிகவும் தாமதமாகத் தொடங்கிய சுமித் சிங்கின் கிரிக்கெட் கரியர் 36 வயதில் பெரும் உயரத்தை எட்டியிருக்கிறது. மிசோரம் அணிக்கெதிரான போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கலக்கினார் சுமித் சிங். முதலில் அந்த அணி பேட்டிங் செய்தபோது சதமடித்து அசத்தினார் சுமித் சிங். அதிரடியாக விளையாடிய அவர், 11 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள் உள்பட 126 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மிசோரம் அணியின் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் (மிசோரம் ஃபாலோ ஆன்) 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மீண்டும் அந்த அணி பேட்டிங் செய்தபோது 76 ரன்கள் விளாசி சிக்கிம் வெற்றி பெறக் காரணமாக அமைந்தார். ஒரு போட்டியில் 176 ரன்கள் + 5 விக்கெட்டுகள்.... சாதாரண செயல்பாடு இல்லையே!

வி கௌஷிக் (கர்நாடகா)

வி கௌஷிக்
வி கௌஷிக்

பஞ்சாப் அணிக்கு எதிராக கர்நாடகா மாபெரும் வெற்றி பெறக் காரணமாக அமைந்தார் கௌஷிக். கடந்த சீசன் கவரப்பாவின் வலையில் எதிரணி வீரர்கள் விழுந்துகொண்டிருக்க, இந்த ஆண்டு அந்த வேலையை தன் கையில் எடுத்திருக்கிறார் கௌஷிக். பஞ்சாப்பின் அணியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி, அந்த அணி வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகக் காரணமாக அமைந்தார் அவர். தன் இரண்டாவது ஓவரில் பிரப்சிம்ரனை வீழ்த்தி விக்கெட் வேட்டையைத் தொடங்கிய அவர், முதல் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மற்ற பௌலர்களை சமாளித்த பஞ்சாப் பௌலர்களால், கௌஷிக்குக்கு எதிராக நிற்க முடியவில்லை. அபிஷேக் ஷர்மா, நேஹல் வதேரா, மந்தீப் சிங் என அனைத்து பெரிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார் கௌஷிக்.

கௌரவ் யாதவ் (பாண்டிச்சேரி)

கௌரவ் யாதவ்
கௌரவ் யாதவ்

ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் பாண்டிச்சேரி அணியின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கிறார் கௌரவ் யாதவ். டெல்லி அணியுடனான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி பட்டையைக் கிளப்பினார் அவர். அதன் விளைவாக வெறும் 148 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது டெல்லி. இந்த 32 வயது மிதவேகப்பந்துவீச்சாளரை 27 ஓவர்கள் பந்துவீச வைத்தார் பாண்டிச்சேரி கேப்டன் ஃபபித் அஹமது. ஆனாலும் அசராமல் பந்துவீசி ரிசல்ட் கொடுத்தார் கௌரவ். டெல்லி அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். ஒட்டுமொத்தமாக டெல்லி போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர்.

ரியான் பராக் (அசாம்)

ரியான் பராக்
ரியான் பராக்

ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் நல்ல செயல்பாடுகளை கொடுக்கும் ரியான் பராக், ரஞ்சிக் கோப்பையிலும் தன் முத்திரையை பதிக்கத் தொடங்கியிருக்கிறார். முதல் இன்னிங்ஸில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தினார். அசாம் அணி ஃபாலோ ஆன் ஆகி தடுமாறியபோது, தனி ஆளாக நின்று போராடினார் அவர். நிதானமாக ஆடுவது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த அவர், அதிரடியைக் கையில் எடுத்தார். 87 பந்துகளில் 155 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார் அவர். இந்த இன்னிங்ஸில் 11 ஃபோர்களும், 12 சிக்ஸர்களும் அடக்கம். இவருடைய அதிரடியால் தான் அசாம் அணி 86 ரன் முன்னிலையாவது பெற்றது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com