’N1, N1+6, N1+2, Wd1, 6’.. ஒரே பந்தில் 18 ரன்கள் வாரிவழங்கி மோசமான சாதனை படைத்த தமிழக வீரர்! வீடியோ

தமிழக வீரர் ஒருவர், 1 பந்தில் 18 ரன்கள் வழங்கி சாதனை படைத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அபிஷேக் தன்வர்
அபிஷேக் தன்வர்twitter

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜூன் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்த போது கடைசி ஓவரின் கடைசி பந்தில் 18 ரன்கள் அடித்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த சேப்பாக்கம் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரான 20ஆவது ஓவரை சேலம் அணியைச் சேர்ந்த அபிஷேக் தன்வர் வீசினார். முதல் 4 பந்துகளில் 1, 4, 0, 1 என ரன்களை விட்டுக் கொடுக்க 5வது பந்து சசிதேவ் பேட்டரை போல்டு ஆக்குகிறது.

ஆனால், அபிஷேக்கின் துரதிர்ஷ்டம் அது நோ பாலாக மாறுகிறது. இதையடுத்து, அந்த பந்துக்கு ரீ பால் வீசிய அபிஷேக் 1 ரன் கொடுக்கிறார். பிறகு கடைசிப் பந்தை வீசி, சஞ்சய் யாதவ்வை போல்டு ஆக்குகிறார். ஆனால், மீண்டும் சோதனை அவரைத் துரத்துகிறது. அந்த பந்தும் நோ பால் என நடுவரால் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து அடுத்த பந்தை வீசும் அபிஷேக், அதையும் நோ பாலாக வீசுகிறார். இதனால் அந்த பந்தில் 1 சிக்ஸர் (+நோ பால் 1 ரன்) மூலம் 7 ரன்கள் கிடைக்கிறது. தொடர்ந்து அதற்கு ரீ பால் வீசச் சென்ற அபிஷேக், அதையும் மீண்டும் நோ பாலாக வீசுகிறார். இதில் இரண்டு ரன்கள் மற்றும் நோ பால் 1 ரன் என மொத்தம் 3 ரன்கள் எடுக்கப்படுகிறது.

அதுவும் நோ பால் என்பதால் அதற்கு மாற்றுப் பந்தை வீசும் அபிஷேக், அந்தப் பந்தையும் சரியாக வீசாமால் வைடு ஆக வீசுகிறார். இதனால் சேப்பாக்கம் அணிக்கு 1 ரன் கிடைக்கிறது. தொடர்ந்து வைடு ஆக வீசிய அந்தப் பந்துக்குப் பதில் ரீ பால் வீசிய அபிஷேக் அதைச் சரியாக வீசியபோதும் அதில் 1 சிக்ஸர் வழங்கினார்.

இதன்மூலம் 1 பந்தில் ஹாட்ரிக் நோ பால்கள் மற்றும் 1 வைடு என எக்ஸ்ட்ரா பந்துகளை வழங்கியதுடன், அந்த ஒரே பந்தில் 18 ரன்களை (N1, N1+6, N1+2, Wd1, 6) வழங்கி சாதனை படைத்துள்ளார். மொத்தத்தில் அந்த கடைசி ஓவரில் மட்டும் அபிஷேக் 26 ரன்களை (1, 4, 0, 1, N1, 1, N1, N1+6, N1+2, Wd1, 6) வழங்கி உள்ளார். 4 ஓவர்களை வீசிய அபிஷேக் 44 ரன்களை தாரை வார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 218 ரன்கள் இலக்கை விரட்டிய சேலம் அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com