டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை! முதல் வீரராக அசத்திய டிம் சவுத்தி!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி.
டிம் சவுத்தீ
டிம் சவுத்தீCricinfo
Published on

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 உலகக்கோப்பைக்கு முன் முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கியுள்ளன. நியூசிலாந்து அணியில் வில்லியம்சனும், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஹரிஸ் ராஃப், ஷாகீன் அப்ரிடி என அனைவரும் பங்கேற்ற முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

Tim Southee
Tim Southee

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், ஃபின் ஆலன் (34 ரன்கள்), கேன் வில்லியம்சன் (57 ரன்கள்) மற்றும் டேரில் மிட்செல் (61 ரன்கள்) மூன்று பேரின் அபாரமான ஆட்டத்தால் 226 ரன்களை குவித்தது. பின்னர் ஒரு இமாலய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில், 57 ரன்கள் அடித்த பாபர் அசாம் கடைசிவரை போராடினார். ஆனால் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சவுத்தீ நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். முடிவில் 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

சர்வதேச டி20 போட்டியில் 150 விக்கெட்டுகள்! டிம் சவுத்தீ படைத்த சாதனை!

226 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் சந்தித்த 8 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் பறக்கவிட்டு 27 ரன்கள் விளாசிய நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் ஆயுப் விட்ட இடத்திலிருந்து சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தனர். 5 ஓவர்களில் 60 ரன்களை கடந்த இந்த கூட்டணியை ரிஸ்வானை 25 வெளியேற்றி பிரித்துவைத்தார் டிம் சவுத்தி. உடன் அடுத்துவந்த அதிரடி வீரர் இஃப்திகார் அகமதுவையும் நீண்ட நேரம் நிற்கவிடாமல் வெளியேற்றிய சவுத்தி, பாகிஸ்தானை முக்கியமான நேரத்தில் தடுத்து நிறுத்தினார்.

Tim Southee
Tim Southee

தொடர்ந்து கடைசி ஸ்பெல்லை வீசவந்த சவுத்தி, அப்பாஸ் அஃப்ரிடி மற்றும் ஹரிஸ் ராஃப் இருவரையும் வெளியேற்றி பாகிஸ்தானை 180 ரன்களில் சுருட்டினார். அறிமுக வீரர் அப்பாஸ் அஃப்ரிடியை வெளியேற்றிய போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய 150வது விக்கெட்டை பதிவுசெய்து சாதனை படைத்தார் சவுத்தீ. டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 சர்வதேச விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துக்கொண்டார்.

அவருக்கு அடுத்த இடங்களில்,

* ஷாகிப் அல் ஹசன் - வங்கதேசம் - 140 விக்கெட்டுகள்

* ரசீத் கான் - ஆப்கானிஸ்தான் - 130 விக்கெட்டுகள்

* இஸ் சோதி - நியூசிலாந்து - 127 விக்கெட்டுகள்

* லசித் மலிங்கா - இலங்கை - 107 விக்கெட்டுகள்

14வது இடத்தில் இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் - 96 விக்கெட்டுகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com