'தி 100' பிளே ஆஃப் சுற்று இன்று தொடக்கம்... மூன்றாவது வாய்ப்பில் கோப்பை வெல்லுமா சதர்ன் பிரேவ்?

இங்கிலாந்தின் 'தி 100' கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறது.
'தி 100' கிரிக்கெட்
'தி 100' கிரிக்கெட்File Image

இங்கிலாந்தின் 'தி 100' கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கிய இந்த மூன்றாவது சீசனின் குரூப் சுற்றுகள் முடிந்திருந்த நிலையில், ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவிலும் தலா 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.

தி 100 தொடரை பொறுத்தவரை மற்ற லீக்குகள் போல 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதில்லை. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கு அணி, நேரடியாக ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிடும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதி, அதில் வெல்லும் அணி ஃபைனலுக்கு முன்னேறும். ஆக, மொத்தமே இரண்டு பிளே ஆஃப் போட்டிகள்தான் இத்தொடரில் நடக்கும்.

ஆண்கள் பிரிவு

இந்த சீசன் ஆண்கள் பிரிவில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி பெரும் ஆதிக்கம் செலுத்தியது. 8 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 6 வெற்றிகள் பெற்றது. ஒரு போட்டி டையில் முடிய, 13 புள்ளிகள் பெற்று எவ்வித போட்டியும் இல்லாமல் முதலிடம் பிடித்தது அந்த அணி. வில் ஜேக்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஹெய்ன்ரிச் கிளாசன் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்கள் அதிரடியால் கலக்க, இளம் வேகப்பந்துவீச்சாளர் கட் அட்கின்சன் தன் அசுர வேகத்தால் விக்கெட் வேட்டை நடத்தினார். இவர்கள்போக கரண் பிரதர்ஸ் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலுமே அணிக்குக் கைகொடுத்தனர்.

இன்வின்சிபிள்ஸ் ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்த, மற்ற இடங்களுக்கு நார்தர்ன் சூப்பர்சார்ஜார்ஸ் தவிர அனைத்து அணிகளுமே கடுமையாகப் போட்டியிட்டன. ஒட்டுமொத்த லீக் சுற்றின் முடிவில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ், சதர்ன் பிரேவ், வெல்ஷ் ஃபயர் அணிகள் 9 புள்ளிகளுடன் சீசனை முடித்தன. இருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஒரிஜினல்ஸ், பிரேவ் இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. நடப்பு சாம்பியனான டிரென்ட் ராக்கெட்ஸ் 7 புள்ளிகள் மட்டுமே பெற்று ஐந்தாவது இடமே பிடித்தது.

எலிமினேட்டர்: மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் vs சதர்ன் பிரேவ் - 26 ஆகஸ்ட்

ஃபைனல்: ஓவல் இன்வின்சிபிள்ஸ் vs எலிமினேட்டர் வின்னர் - 27 ஆகஸ்ட்

பெண்கள் பிரிவு

ஆண்கள் பிரிவில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அசத்தினாலும், பெண்கள் பிரிவில் அந்த அணி இம்முறை சறுக்கியது. தொடர்ந்து இரண்டு முறையும் சாம்பியன் பட்டம் வென்றிருந்த அந்த அணிக்கு கேப்டன் டனேவின் காயம் பெரும் பின்னடைவாக அமைந்தது. 8 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்த அந்த அணி, 7 புள்ளிகளுடன் ஐந்தாவது இடமே பிடித்தது.

இருந்தாலும் அந்த இரண்டு ஃபைனல்களிலும் தோற்றிருந்த சதர்ன் பிரேவ் அணி தங்கள் முதல் கோப்பையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. லீக் சுற்றில் பெரும் ஆதிக்கம் செலுத்திய அந்த அணி, ஒரு போட்டியில் மட்டும்தான் தோற்றது. மற்ற 7 போட்டிகளையும் வென்று 14 புள்ளிகளுடன் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது சதர்ன் பிரேவ். அந்த அணியின் இளம் பேட்டர் மாயா பூச்சியேர் 8 இன்னிங்ஸ்களில் 264 ரன்கள் குவித்து இரண்டாவது டாப் ஸ்கோரராகத் திகழ்கிறார். இவர் மட்டுமல்லாமல் டேனி வியாட், இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா ஆகிதோரும் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டாப் 5 இடங்களுக்குள் இருக்கிறார்கள். இப்படி பல பேட்டர்கள் அசத்தியது அந்த அணிக்குப் பக்கபலமாக அமைந்தது. அதேபோல் ஆஃப் ஸ்பின்னர் ஜார்ஜியா ஆடம்ஸ் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சீசனின் டாப் விக்கெட் டேக்கராக திகழ்கிறார்.

சதர்ன் பிரேவ் தவிர்த்து, நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ், வெல்ஷ் ஃபயர் ஆகிய அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. சூப்பர்சார்ஜர்ஸ் 12 புள்ளிகளும், ஃபயர் 11 புள்ளிகளும் பெற்றன. இந்த சீசனில் படுமோசமாக விளையாடிய பிர்மிங்ஹம் ஃபீனிக்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் தோற்றது. ஒரு போட்டி மழையால் ரத்தாக, அந்த ஒரேயொரு புள்ளி தான் இந்த சீசன் அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

எலிமினேட்டர்: நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் vs வெல்ஷ் ஃபயர் - 26 ஆகஸ்ட்

ஃபைனல்: சதர்ன் பிரேவ் vs எலிமினேட்டர் வின்னர் - 27 ஆகஸ்ட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com