'30 பந்தில் சதமடிப்பதற்கு முன்பு..' அபிஷேக் சர்மாவிற்கு யுவராஜ் சொன்ன அட்வைஸ்!
அபிஷேக் சர்மாவின் இயல்பான ஆக்ரோஷமான ஆட்டத்தில், யுவராஜ் சிங் சமநிலை கொண்டு வரச் சொன்னது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. எல்லா பந்தையும் பவுண்டரிக்குப் போகாமல், தேவையான இடங்களில் ஒற்றை, இரட்டை ரன்கள் எடுத்து இன்னிங்ஸை நீட்டிக்க வேண்டும் என்ற யுவராஜின் மெசேஜ், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சை தைரியமாக சமாளித்த அவரது சமீபத்திய ஆட்டத்தில் தெளிவாகப் பிரதிபலித்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 82 ரன்கள், 39 ரன்கள், 108 ரன்கள் என ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என அடித்து அசத்தினார். அதிலும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் 30 பந்தில் சதம் விளாசிய அபிஷேக், டெஸ்ட் விளையாடும் நாடுகளின் வீரர்களில் அதிவேகமாக சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்தார்.
இந்தசூழலில் முதல் போட்டியில் சதத்தை தவறவிட்டதோடு, 2வது போட்டியிலும் நல்ல தொடக்கம் கிடைத்து அவுட்டான நிலையில், அபிஷேக் சர்மாவை அழைத்து யுவராஜ் சிங் அறிவுரை கூறியுள்ளார்.
வரலாற்று சாதனை படைத்தபிறகு யுவராஜ் கூறிய அட்வைஸ் குறித்து பேசிய அபிஷேக் சர்மா, “சார் எப்போதும் நான் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று விரும்புவார். நான் அணிக்கு அப்படி ஒரு தொடக்கத்தைக் கொடுத்தால், நிச்சயமாக, நாங்கள் வெற்றி பெறும் அணியாக இருப்போம். கடைசி போட்டிக்கு பிறகு எனக்கு அவரிடமிருந்து எல்லா பந்தையும் சுத்தக்கூடாது என்று மெசேஜ் வந்தது. ஒன்று அல்லது இரண்டு ரன்களை ஓடி எடுக்கும் ஆட்டம் என்னுடையது அல்ல, ஸ்லாட்டில் இருக்கிறதா அடித்துவிடு என்பது தான் என் ஆட்டம். ஆனால் என்னால் ஒற்றை ரன்களையும் எடுக்க முடியும்” என்று கூறினார்.
அபிஷேக்கின் பேட்டிங்கில் ஒரு சுவாரஸ்யமான சமநிலை உருவாகி வருகிறது. அவரது இயல்பான ஆட்டம், எதிரணியின் பந்துவீச்சைச் சிதறடிப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பெரிய ஷாட்களை போலவே சிங்கிள் எடுப்பதும் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே யுவராஜின் செய்தியாக அபிஷேக்கிற்கு இருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிரணிகள் அபிஷேக்கிற்கு எதிராக ஸ்பின் பவுலிங்கை ஆயுதமாக பயன்படுத்திய நிலையில், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சு தாக்குதலுக்கு எதிராகவும் அபிஷேக் முன்னேற்றம் காட்டினார். ரஷீத் மற்றும் பிற ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களைத் தாக்க அவர் காட்டிய ஆர்வம், அனைத்துவிதமான பவுலிங்கையும் தன்னால் அடிக்கமுடியும் என அவர் வளர்த்துக் கொண்ட நம்பிக்கையைக் காட்டியது. அபிஷேக் ஆக்ரோசமாகவும், அதே நேரம் அமைதியாகவும் விளையாடினால் அது இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.

