”விராட் கோலி போன்ற ஒரு கேப்டனை ‘டெஸ்ட் கிரிக்கெட்’ இழந்துவிட்டது!” - இயன் மோர்கன்

விராட் கோலியை போன்றே பென் ஸ்டோக்ஸும் செயல்பட்டு வருகிறார், இருவரும் களத்தில் காட்டும் அட்டாக்கிங் அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டை நம்பமுடியாததாக மாற்றுகிறது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் கூறியுள்ளார்.
Eion Morgan - Virat Kohli
Eion Morgan - Virat Kohlitwitter

தற்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் “பேஸ்பால்” அணுகுமுறை அதிகமாக பேசப்படுகிறது. இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ப்ரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்றதிலிருந்து அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையை ஆடிவருகிறது. டெஸ்ட்டில் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாடும் இங்கிலாந்து அணி அதில் வெற்றியையும் கண்டுவருவதால் “பேஸ்பால்” என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. ஆனால் இங்கிலாந்தின் இந்த அணுகுமுறைக்கு முன்னதாகவே விராட் கோலி தனித்துவமான அணுகுமுறையை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்தியிருந்தார். அது பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் ஒரு அட்டாக்கிங் அணுகுமுறையை பின்பற்றியது.

விராட் கோலி தலைமையிலான இந்திய நிர்வாகம், அட்டாக்கிங் பந்துவீச்சுக்கு தகுந்தாற்போல் இந்திய அணியை வேகப்பந்துவீச்சாளர்கள் நிரம்பிய ஒரு யூனிட்டாக மாற்றியது. எந்த முடிவையும் துணிச்சலாக எடுக்கும் அவருடைய மாற்றத்திற்கான விதை, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை இதற்கு முன் செய்யாத பல சாதனைகளை செய்ய வைத்தது. அவர் ஏற்படுத்திய அந்த அட்டாக்கிங் அணுகுமுறையால் தான் தொடர்ச்சியாக இரண்டுமுறை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் ஒயிட் பால் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் எக்காலத்திற்கும் சிறந்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்றால் அது விராட் கோலி மட்டும் தான்.

'டெஸ்ட் கிரிக்கெட்' விராட் கோலி போன்ற ஒரு கேப்டனை இழந்துவிட்டது! - இயன் மோர்கன்

டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து எப்போதும் குரல் கொடுப்பதில் முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி. அவர் எவ்வளவு டெஸ்ட் கிரிக்கெட்டை நேசித்தார், எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பது பற்றி அவரே பல நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலி, 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்று 58.82 சதவீதத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலகத்தின் நான்காவது வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துவருகிறார். இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் ஜனவரி 2023-ல் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

விராட் கோலி குறித்து பேசியிருக்கும் மோர்கன், “என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் நம்பமுடியாததாகவே இருந்து வருகிறது. உண்மையில் அது உங்களுக்கு சவாலான நேரத்தை தரக்கூடியது. டெஸ்ட் கிரிக்கெட் ஒரு கேப்டனாக விராட் கோலியை இழந்துவிட்டது. அவர் அதை எவ்வளவு நேசித்தார் மற்றும் அதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதைப் பற்றி எப்போதும் அவர் தெளிவாகப் பேசியுள்ளார்”என்று மோர்கன் மிரர் உடன் கூறியுள்ளார்.

விராட் கோலியை போன்றே பென் ஸ்டோக்ஸும் செயல்பட்டுவருகிறார்!

இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாக கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ், 13 போட்டிகளில் 11-ல் வெற்றியை பெற்று அசத்தியுள்ளார். ஸ்டோக்ஸ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கூட்டணியானது தங்களது ‘பேஸ்பால்’ அணுகுமுறையால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியே ஏற்படுத்தியுள்ளனர். டெஸ்ட்டில் அவர்கள் 4.85 ரன் விகிதத்தில் ரன்களை எடுத்துவருகின்றனர். இவர்களின் இந்த மாற்றத்தால் வெற்றிக்கு செல்லும் ஒரு அணி டிராவை பற்றி சிந்திக்க வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Ben Stokes
Ben Stokestwitter

பென் ஸ்டோக்ஸ் குறித்து பேசியிருக்கும் மோர்கன், “கோலியை தொடர்ந்து ஸ்டோக்ஸும் டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியமான ஒன்றாக மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் மற்றும் கோலி போன்ற கேரக்டர்கள் இருப்பதால், தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டுமல்ல அனைத்து போட்டிகளும் கவனத்தை பெறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com