கில் இல்லாமல் ஆஸியை எதிர்கொள்ளும் இந்தியா! சேப்பாக்கத்தில் தொடங்கும் உலகக் கோப்பை தேடல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் எதிர்கொள்ளும் உலகக்கோப்பை போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
IND vs AUS
IND vs AUSTwitter

2023 உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற இந்திய அணியின் தேடல் சென்னையில் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே கோப்பை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது ரோஹித் அண்ட் கோ. உலகக் கோப்பை அரங்கில் சமீபமாக இந்த இரு அணிகளுக்குமான போட்டியில் இரு அணிகளுமே மாறி மாறி வெற்றிகளை வசப்படுத்தியிருக்கின்றன. 2003ல் ஃபைனல் உள்பட இந்தியாவை இரு முறை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

Twitter
Twitter

2011ல் ஆஸ்திரேலியாவை காலிறுதியில் தோற்கடித்தது தோனியின் அணி. 2015ல் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது ஆஸ்திரேலியா. கடந்த ஆண்டு லீக் சுற்றில் இந்திய அணிதான் இந்த யுத்தத்தில் வென்றிருந்தது. இப்படி இரு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த உலகக் கோப்பையில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பை வெல்லும் ரேஸில் முன்னால் சென்றுவிடும் என்றும் பலர் கருதுகின்றனர்.

இந்தியாவுக்கு சுப்மன் கில் இல்லை

10 ஆண்டு கால ஐசிசி கோப்பை வறட்சியைப் போக்க நினைக்கும் இந்திய அணி இந்தப் போட்டியில் நட்சத்திர ஓப்பனர் சுப்மன் கில் இல்லாமல் களமிறங்கப்போகிறது. சிறப்பான ஃபார்மில் இருக்கும் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டுவருவதால் அவர் ஆடுவது சந்தேகம் என்று இரு தினங்களுக்கு முன்பே கூறப்பட்டது. அதனால், இஷன் கிஷன் அல்லது கே.எல் ராகுல் இருவருள் ஒருவர் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனராகக் களமிறங்கலாம். ராகுல் மிடில் ஆர்டருக்கு முக்கியம் என்பதாலும், இஷன் கிஷன் போன்ற ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஓப்பனராக இறங்கினால், மிட்செல் ஸ்டார்க்கை எதிர்கொள்ள அது சரியான யுக்தியாக இருக்கும் என்பதாலும் இஷன் ஓப்பனராக இறங்குவதே அணிக்கு சரியானதாக இருக்கும்.

Gill
Gill

கில் இல்லை என்பது ஒரு பெரிய பின்னடைவு என்றாலும் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதால் நிச்சயம் இந்தியா பெரிய அளவில் ஸ்கோர் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். பும்ரா, சிராஜ், குல்தீப் என இந்தியாவின் பந்துவீச்சும் அசுர ஃபார்மில் இருக்கிறது. சென்னை ஆடுகளம் என்பதால் நான்காவது பௌலராக ரவிச்சந்திரன் அஷ்வின் தேர்வு செய்யப்படலாம்.

ஸ்டாய்னிஸா, கிரீனா, லாபுஷானா?

இந்திய அணியில் வீரர்கள் இல்லாதது பிரச்னை என்றால், ஆஸ்திரேலியாவுக்கு அதிக வீரர்கள் இருப்பது பிரச்னை. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி என ஐந்து வீரர்கள் விளையாடுவது உறுதி. மற்ற 2 இடங்களுக்குத்தான் 3 வீரர்களிடையே பெரும் போட்டி நிலவப்போகிறது. அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தவிர நிலையாக விளையாடும் இன்னொரு வீரர் தேவை என்பதால் லாபுஷானும் கிட்டத்தட்ட விளையாடிடுவார். கிரீன், ஸ்டாய்னிஸ் இருவரில் யார் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. எந்த அணியின் பிளேயிங் லெவனிலும் ஆடக்கூடிய அந்த ஆல்ரவுண்டர்களுக்கு ஆஸ்திரேலிய லெவனில் இடம் கிடைக்காத அளவுக்கு அந்த அணி பலமாக இருக்கிறது.

Marnus
Marnus

பந்துவீச்சிலும் அந்த அணி பலமாகவே இருக்கிறது. ஜாம்பா, ஹேசில்வுட் ஆகியோர் சென்னை மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இவ்விரு அணிகளும் சேப்பாக்கத்தில் மோதியபோது 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜாம்பாதான் ஆட்ட நாயகன் விருதும் வென்றார். பயிற்சிப் போட்டியில் ஸ்டார்க் ஹாட்ரிக் வீழ்த்தி நம்பிக்கையோடு களம் காண்கிறார். அதனால் இந்தப் போட்டியில் அவர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார்கள்.

ஆடுகளம் எப்படி?

சேப்பாக்கம் ஆடுகளத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நிச்சயம் ஸ்பின்னர்களுக்கு சாதகமானதாக இருக்கும். அதேசமயம் ஐபிஎல் போட்டிகளைப்போல் அல்லாமல் ஓரளவு பேட்ஸ்மேன்களுக்கும் ஒத்துழைக்கக் கூடிய ஆடுகளமாக இருக்கும். 250-270 நல்ல ஸ்கோராக இருக்கும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

இந்தியா - விராட் கோலி: மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் கிங் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். சுப்மன் கில் இல்லாத நிலையில், கோலி மீது எதிர்பார்ப்பு அதிகமாகும். ரோஹித் சமீபமாக அதிரடி மோடில் விளையாடுவதால், நிலைத்து நின்று ஆடக்கூடிய கோலி மீது நெருக்கடி அதிகமாகலாம். ஆனால் கிங் கோலிதான் எப்போதும் நெருக்கடியை விரும்புபவர் ஆயிற்றே

kohli
kohli

ஆஸ்திரேலியா - கிளென் மேக்ஸ்வெல்

பயிற்சிப் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து, தான் மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார் மேக்ஸ்வெல். மேலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகள் வீழ்த்திக்கொண்டிருக்கிறார். சுழலுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் இரண்டாவது ஸ்பின்னராகவும் இவர் செயல்படுவார் என்பதால், நிச்சயம் ஒரு முழுமையான ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸை அவர் கொடுப்பார்.

Glenn Maxwell
Glenn Maxwell

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

நிச்சயம் இரு அணிகளுமே சம வாய்ப்பு கொண்டிருக்கின்றன. இருந்தாலும் சிறந்த ஸ்பின் ஆப்ஷன்கள் கொண்டிருப்பது இந்தியாவுக்கு கொஞ்சம் கூடுதல் சாதகமான அம்சம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com