’நான் ரெடிதான் வரவா’.. ஆஸியை அலறவிட்ட பந்துவீச்சு.. உலகக்கோப்பை அணியிலேயே அஸ்வினுக்கு பச்சைக்கொடி!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்ட்விட்டர்

செப். 5ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முதல் பட்டியல்!

இன்னும் சில தினங்களில் 50 ஓவர் ஆடவர் உலகக்கோப்பைக்கான போட்டிகள் இந்தியாவில் தொடங்க இருக்கின்றன. விரைவில் இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. ஏற்கெனவே இதற்கான அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Rohit Sharma
Rohit Sharmatwitter

அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட 15 வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அஸ்வினைத் தேர்வு செய்யாதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் விமர்சனம்

இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர்கூட செய்யப்படாது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என பல மூத்த கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்திருந்தனர். மேலும் தமது பெயர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது குறித்து கருத்து தெரிவித்த அஸ்வின், “அணியைத் தேர்ந்தெடுப்பது எனது வேலை அல்ல என்பதால் அதில் கவனம் செலுத்துவதில்லை. பொதுவாக எந்த ஒரு வேலையையும் முடிக்காமல் வைத்திருப்பதில் நம்பிக்கை இல்லை. நான் அணியில் இல்லாவிட்டாலும், இந்தியா மீண்டும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அஸ்வின்
அஸ்வின்file image

ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெற்ற அஸ்வின்

இந்தச் சூழலில்தான் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் அஸ்வின் இடம்பெற்றதோடு, சிறப்பாகப் பந்துவீசி மீண்டும் கவனத்தை ஈர்த்தார். அதாவது, ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பாகப் பந்துவீசுகிறார் என்பது பலருடைய விமர்சனம். ஏற்கெனவே இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவருடைய பந்துவீச்சு சிறப்பாக எடுபட்டிருக்கிறது. அது, இந்திய அணியின் வெற்றிக்கும் வழிவகுத்திருக்கிறது.

இந்தச் சூழலில் இந்திய அணி அக்டோபர் 8ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. மேலும், இது அஸ்வினுக்கு சொந்த மைதானமும் ஆகும். தவிர, 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பிடித்து விளையாடி உள்ளார். மொத்தமாக 10 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மீண்டும் அஸ்வினை உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆசியக்கோப்பையில் காயமடைந்த அக்சர் பட்டேல்!

இதற்கிடையே கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர்4 சுற்றின்போது அவர் காயமடைந்ததை அடுத்து, அத்தொடரின் இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் விளையாடவில்லை. அதேநேரத்தில் அவருக்குப் பதிலாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வாஷிங்டன் சுந்தர் அத்தொடரில் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அவர் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அக்சர் பட்டேல்
அக்சர் பட்டேல்

இறுதிப்பட்டியலில் அஸ்வின் பெயர்!

இந்தச் சூழலில்தான் அஸ்வின் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். இதை, ஐசிசி உறுதி செய்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை வரும் செப்.28க்குள் (இன்று) இறுதிக்கட்ட மாற்றங்களுடன் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கெனவே காலக் கெடு வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து சில மாற்றங்களுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சிப் போட்டியில் பங்கேற்க கவுகாத்தி புறப்பட்ட அஸ்வின்

அதில், உலகல்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது. காயம் காரணமாக அக்சர் பட்டேல் விலகியதையடுத்து அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் செப்.30ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக அஸ்வின் கவுகாத்தி புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 பேர் கொண்ட இந்திய அணியின் விவரம்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.ல்.ராகுல் (விக்கெட் கீப்பர்) இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகம்மது சமி, முகம்மது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com