கதகளி ஆடிய ஆலன்.. அதிவேக சதம்.. மிரண்டுபோன SA.. ஃபைனலுக்குள் நுழைந்த NZ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றது. தவிர, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக ஆடி அதிவேக சதமடித்தார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. முன்னதாக, இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்றிருந்தன. இதில், இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் ஜெயித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செயதது. அதன்படி தொடக்க பேட்டர்களாக கேப்டன் எய்டன் மார்க்ரம்மும் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.
எனினும், அவர்கள் நீண்டநேரம் நிலைக்கவில்லை. மார்க்ரம் 18 ரன்களிலும், டி காக் 10 ரன்களிலும் வெளியேறினர். ஆனாலும், பிரேவிஸ் 34 ரன்களும், ஸ்டெப்ஸ் 29 ரன்கள் எடுத்துக் கொடுக்க, மார்கோ ஜேன்சன் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். அவர் கடைசிக்கட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவ்வணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, மெக்கோன்சி, ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர்களான டிம் செய்ஃப்ர்ட் மற்றும் ஃபின் ஆலன் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். செய்ஃபர்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிலையில் வெளியேறினார். அவர் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். எனினும், மறுமுனையில் ஆட்டமிழக்காத ஃபின் ஆலன் இறுதிவரை ஆட்டமிழக்காது அதிரடியாக ஆடி சதமடித்ததுடன் நியூசிலாந்து அணியையும் வெற்றிபெற வைத்தார். 12 ஓவர்களில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 48 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 13ஆவது ஓவரை எதிர்கொண்டார் ஆலன்.
அந்த ஓவரை மார்கோ ஜேன்சன் வீசினார். அதில் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பிய ஆலன், அதற்கடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்குத் தூக்கினார். இதன்மூலம் அவருடைய தனிப்பட்ட ரன் 96 ஆக இருந்தது. அதேநேரத்தில், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது 5ஆவது பந்தை எதிர்கொண்ட அவர், அதை பவுண்டரியாக மாற்றினார். இதன்மூலம் சதத்தையும் பதிவுசெய்தார். அணியையும் வெற்றிபெற வைத்தார். அந்த அணி, 12.5 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. மறுபுறம் வழக்கம்போல், தென்னாப்பிரிக்கா அணி நாக் அவுட் போட்டிகளில் தோற்று வெளியேறும் கதை தொடர்கிறது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியில் மிரட்டிய ஆலன், 33 பந்துகளில் சதமடித்தார். அதில் 10 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடக்கம். டி20 போட்டிகளில் அதிவேகமாய் சதமடித்த வீரர்களின் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் எஸ்டோனியா வீரர் ஷகில் செளகான் உள்ளார். அவர், 27 பந்துகளில் சதமடித்தார். அவரைத் தொடர்ந்து 2ஆவது இடத்தில் துருக்கியைச் சேர்ந்த முகமது ஃபகாத் உள்ளார். அவர் 29 பந்துகளில் சதமடித்துள்ளார். அதேநேரத்தில், ஆலனுடன் மேலும் இரண்டு வீரர்கள் (ஜான் நிகோல், சிக்கந்தர் ராசா) 3ஆவது இடத்தில் உள்ளனர். இன்னொரு புறம் டி20 உலகக்கோப்பை தொடரில், அதிவேகமாக சதமடித்த வீரர்களின் பட்டியலில் ஆலனே முதலிடத்தில் உள்ளார்.

