3 மணி நேரத்தில் 1000 பந்துகள்.. பிசிசிஐக்கு சூசக மெசேஜ் அனுப்பிய SKY.. அணியில் இடம்பெறுவாரா?
இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். அவரது தலைமையில் அணி பல வெற்றிகளையும் தொடர்களையும் பெற்றிருந்தாலும் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் இல்லை. தவிர, எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவரது கேப்டன்ஷிப்பைப் பறித்ததுடன், அணியிலிருந்தும் நீக்கியது. இதையடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கு அவரது தலைமையிலான அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களை இழந்த அவரது தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இந்த நிலையில், அணியிலிருந்து நீக்கப்பட்ட ’இந்தியாவின் 360’ என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், மீண்டும் அணியில் இடம்பிடிக்கப் போராடி வருகிறார். அதற்காக உள்ளூர்ப் போட்டிகளிலும், பயிற்சிகளும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். அந்த வகையில், மைதானம் ஒன்றில் தீவிரமாக ஓடி, பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ளார். அதில், "ஞாயிற்றுக்கிழமை ஜாலியாகச் சென்றது. வேகமாக ஓடினேன். 3 மணிநேரத்தில் சுமார் 1000 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்தேன். மிகவும் நன்றாக உணர்கிறேன்" என அதில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர், பிசிசிஐக்கு அவர் சூசகமாக மெசேஜ் அனுப்பியிருப்பதாக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

