”பத்ரிநாத் எனக்கு பேட்டிங் செய்ய சொல்லித்தந்தார்..” 5 தமிழக வீரர்களை நினைவுகூர்ந்த ரெய்னா!
சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது பயணத்தை நினைவுகூர்ந்து, தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், பத்ரிநாத், லக்ஸ்மிபதி பாலாஜி, முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோருடன் விளையாடிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மிடில் ஆர்டரில் பேட்டிங் சவாலாக இருந்தாலும், பத்ரிநாத் வழங்கிய ஆலோசனைகள் தன்னை பலப்படுத்தியதாக அவர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவானான சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கேவிற்காக 195 இன்னிங்ஸில் 2 சதங்கள் 38 அரைசதங்களுடன் 5529 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் இரண்டையும் சேர்த்து சிஎஸ்கேவிற்காக 6 கோப்பைகளை வென்றிருக்கும் சுரேஷ் ரெய்னா, சென்னை ரசிகர்களால் ’சின்ன தல’ என அன்போடு அழைக்கப்படுகிறார். இதைத்தாண்டி பந்துவீச்சிலும் சிஎஸ்கேவிற்காக பங்களித்திருக்கும் அவர் 36 விக்கெட்டுகளையும், 107 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய பயிற்சியாளர்கள் தலைமையில் மாற்றத்தை சந்தித்திருக்கும் சூழலில், பேட்டிங் பயிற்சியாளர் பதவி இன்னும் நிரப்படாமல் மீதமிருக்கிறது. அதற்கு பிரான்சைஸ் உடன் பேசியிருப்பதாகவும், முடிவு அவர்களின் கையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான பயணம் குறித்து பல்வேறு விசயங்களை பகிர்ந்து சுரேஷ் ரெய்னா, தமிழகத்தைச்சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், பத்ரிநாத், லக்ஸ்மிபதி பாலாஜி, முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோரையும் நினைவுகூர்ந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான உரையாடலில் பேசியிருக்கும் சுரேஷ் ரெய்னா, சென்னையை தன்னுடைய இரண்டாவது வீடு என குறிப்பிட்டார். இங்கிருக்கும் கலாச்சாரம், உணவுகள் என அனைத்தும் தனக்கு பிடிக்கும் என்றும், மண்ணைச்சேர்ந்த சிறந்த வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், பத்ரிநாத், லக்ஸ்மிபதி பாலாஜி, முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர்களுடன் விளையாடியதை மறக்கமுடியாத அனுபவம் என்று குறிப்பிட்டார். அதிலும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது தான் சவாலான விசயம் என்று பேசிய அவர், பத்ரிநாத் உடன் சேர்ந்து அடித்த பார்ட்னர்ஷிப்புகளை நினைவுகூர்ந்தார். அழுத்தமான நேரத்தில் மிடில் ஆர்டரில் எப்படி விளையாட வேண்டும் என பத்ரிநாத் தனக்கு சொல்லிக்கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயிற்சியாளராக இணைவது குறித்து பேசிய அவர், "நான சாவதேச கிரிக்கெட், ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைகள் என பல அழுத்தமான நேரங்களில் விளையாடியுள்ளேன். அதனால், கிரிக்கெட்டின் அனைத்து அம்சங்களையும் நான் அனுபவித்திருக்கிறேன். குறிப்பாக 9 இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளேன், அதில் 4ல் வெற்றி 5ல் தோல்வியடைந்திருக்கிறேன். அதனால் அப்படியான சூழலில் எப்படி விளையாட வேண்டும், என்ன செய்யவேண்டும் என்ற அனுபவம் எனக்கு நன்றாக தெரியும். அப்படியான அழுத்தத்தை எப்படிக் கையாள்வது மற்றும் மனதளவில் உங்களால் முடிந்த சிறந்ததை எப்படி வெளிக்கொணர்வது என்பதையும் நான் கற்றுக்கொண்டேன். எனவே, இந்தத் தொடரில் நான் என்ன சாதித்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அதை நான் வீரர்களுக்குத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன். நான் ஏற்கனவே அவர்களிடம் பேசிவிட்டேன், இனி அவர்களின் கையில் தான் உள்ளது. நான் அவர்களுடன் எந்தப் பொறுப்பில் வேண்டுமானாலும் பணியாற்ற விரும்புகிறேன், ஏனென்றால் முடிவில் அவர்கள் கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன், மஞ்சள் தான் எனக்கு எல்லாமே" என்று ரெய்னா வெளிப்படையாக பேசியுள்ளார்.
மேலும் ஜாகீர் கான் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவிற்கு ஓராண்டல்ல குறைந்தது 3 ஆண்டுகளாகவது ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.

