இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டியில், 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
2023 ஐபிஎல் தொடர் முடிந்து 10 நாட்கள் இடைவெளியில் தான் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். எப்படி இவர்களால் வெள்ளைப்பந்து ஆட்டத்திலிருந்து சிகப்பு ஆட்டத்திற்கு உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ள முடியும் என கேள்விகள் அதிகமாக இருந்த நிலையில், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினை ஆடும் இந்திய அணியில் எடுக்காமல் விட்டது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கியது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகமான இடது கை வீரர்கள் இருந்த போதும் அஸ்வின் சேர்க்கப்படாத நிலையில், இடது கை பேட்டர்களான டேவிட் வார்னர், டிரவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி மற்றும் மிட்சல் ஸ்டார்க் போன்ற வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். என்ன தான் அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கிய ஜடேஜா சிறப்பாக செயல்பட்டாலும், பெரிய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை.
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, “WTC இறுதிப் போட்டிக்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட விரும்புகிறேன். நாங்கள் கடுமையாக உழைத்தோம், போராடினோம், ஆனால் 1 போட்டியில் மட்டுமே விளையாடினோம். அடுத்த WTC சுழற்சியில் 3-போட்டிகள் கொண்ட ஃபைனல் இருந்தால் சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
ரோகித் சர்மாவின் இந்த கருத்திற்கு பதில் பேசியிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், “நீங்கள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையோ அல்லது 16 போட்டிகள் கொண்ட தொடரையோ கூட கேட்கலாம், ஆனால் அதற்கான நேரத்தை நீங்கள் பார்க்க வேண்டும். ஒரே ஒரு இறுதிப் போட்டியில் விளையாடித்தான் ஒலிம்பிக்கில் வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ரோகித் சர்மாவின் 3 போட்டிகள் கொண்ட ஃபைனல் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ”இது தவறான போக்கு. உங்களுக்கு ஒரே ஒரு இறுதிப்போட்டி என்று முன்கூட்டியே தெரியும். அதற்கு தயாராகாமல் உங்களுடைய சௌகரியத்திற்கு 3 போட்டிகள் கொண்ட தொடரை கேட்கிறீர்கள். பின்னர் நீங்கள் நாளை 5 போட்டிகள் கொண்ட ஃபைனலை கேட்பீர்கள்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசியிருக்கும் சுனில் கவாஸ்கர், "இல்லை இது தவறு. ஒரேயொரு இறுதிப்போட்டி என்ற முடிவானது நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. நீங்கள் சுழற்சியின் முதல் போட்டியில் நுழைவதற்கு முன்பே, ஒரே ஒரு இறுதிப்போட்டி தான் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் அதற்காக மட்டுமே மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
நீங்கள் ஐபிஎல்லிற்கு தயாராகும் போது, மூன்று போட்டிகள் கொண்ட ஃபைனலை கேட்க முடியாதல்லவா. அனைவருக்கும் மோசமான ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்கள் கூட இருக்கலாம். ஆனால் சுழற்சியின் முதல் பந்திற்கு முன்பே இது என்னமாதிரியான போட்டி, எத்தனை நாட்கள் இருக்கும் என உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே, நீங்கள் 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என சொல்ல முடியாது. இப்போது 3 போட்டிகள் கொண்ட தொடரை கேட்கும் நீங்கள், நாளை ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை கூறலாம்" என்று கவாஸ்கர் இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.