”தமிழ்நாடு வீரராக இருந்தால் சுப்மன் கில் அணியிலேயே இருக்க மாட்டார்” - சுப்பிரமணியம் பத்ரிநாத்
2024-2025 பார்டர் கவாஸ்கர் டிரோபி தொடரில் இந்தியாவை 3-1 என வீழ்த்தி வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, 2014-க்கு பிறகு 10 வருட தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 161 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பையும் இழந்தது.
இந்தியாவில் பும்ராவை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பான பங்களிப்பை கொடுக்கவில்லை, அதிலும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட டாப் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடவில்லை. ஒரு அணியாக சேர்ந்து செயல்படாத இந்திய அணியால் கையில் இருந்த தருணங்களை கூட தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியவில்லை.
இந்த சூழலில் அணிக்கு எந்தவிதத்திலும் உதவியாக இல்லாத சுப்மன் கில்லை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத்.
சுப்மன் கில் எந்தவிதத்தில் அணியில் இருக்கிறார்..
5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் பேசிய சுப்பிரமணியம் பத்ரிநாத், சுப்மன் கில்லின் மோசமான செயல்பாடுகளை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
கில்லை கடுமையாக விமர்சித்த பத்ரிநாத், “சுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்தால் எப்பவோ அணியிலிருந்து வெளியேற்றி இருப்பார்கள். அவர் பேட்ஸ்மேனாக அணிக்கு எந்த உதவியும் செய்வதில்லை. நீங்கள் ரன்கள் அடிக்கவேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் குறைந்தபட்சம் அதிகநேரம் களத்தில் நின்று பந்துகளை பழையதாக்கவோ, பவுலர்களை சோர்வாக்கவோ உதவவேண்டும். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக சுப்மன் கில் இதை எதையுமே செய்யவில்லை.
ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் அவரால் ஸ்லிப்பிலோ, பாயின்ட்டிலோ கூட ஃபீல்டிங்கில் நின்று கேட்ச்களை எடுக்க முடியாது. அவருடைய ஃபீல்டிங்கும் சிறப்பாக இல்லை. அவர் இந்திய அணிக்கு எந்த வகையில் உதவுகிறார் என்னும் கேள்வி என் மனதில் எழுகிறது” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.