நாலாபுறமும் ஓடிய பந்துகள்.. திணறிய பவுலர்கள்.. இலங்கை வீரரின் மரண அடியால் CPL-இல் புதிய சாதனை!
2026 கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போட்டி ஒன்றில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, செயின்ட் லூசியா கிங்ஸ் அணியுடன் மோதியது. இதில், செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் தசுன் ஷனகா 39 பந்துகளில் சதத்தை எட்டி சாதனை படைத்தார். இப்போட்டியில் முதலில் பேட் செய்த செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. முன்னதாக, இவ்வணி 9.2 ஓவரில் 89 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஷனகா களமிறங்கினார். அவர் களமிறங்கியது முதல் எதிரணி பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்தார். குறிப்பாக, அவரது பேட்டில் இருந்து பந்துகள் பவுண்டரியும் சிக்ஸருமாய் எல்லைக்கோட்டுக்குப் பறந்தபடியே இருந்தன.
இதனால், அவருக்கு எப்படி பந்து வீசுவது எனத் தெரியாமல் எதிரணி பவுலர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். ருத்ரதாண்டவமாடிய ஷனகா, 39 பந்துகளில் சதம் அடித்து சிபிஎல் வரலாற்றை மாற்றி எழுதினார். இதற்கு முன் ஆண்ட்ரே ரசல், டிம் செய்பெர்ட், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் தலா 40 பந்துகளில் சதம் விளாசியதே சிபிஎல் தொடரில் அதிவேக சதம் என்ற சாதனையாக இருந்தது. அதை ஷனகா, தற்போது தனி ஆளாக உடைத்தெறிந்து புதிய சாதனை படைத்தார். அவருடைய இந்த 121 ரன்களில் 8 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடக்கம். பின்னர் கடுமையான இலக்கை நோக்கி ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 98 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, செயிண்ட் கிட்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரையும் படிக்க: நிறம் மாறும் சினிமா - 7 | அண்ணா – கலைத்துறையில் தம்பிகளை உருவாக்கிய தளபதி!

