ஷகிப் செய்தது சரியா? தவிர்த்து இருக்கலாமா?.. விவாதத்தை கிளப்பிய மேத்யூஸின் ’Timed out’ விக்கெட்!

இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு, சர்ச்சைக்குரிய முறையில் அவுட் வழங்கப்பட்டது குறித்து நடுவர் ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக் விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக், ஏஞ்சலோ மேத்யூஸ்
ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக், ஏஞ்சலோ மேத்யூஸ்twitter

அரையிறுதியில் மல்லுக்கட்டும் 4 அணிகள்

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் இந்திய அணி, 8 போட்டிகளிலும் வென்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேநேரத்தில் 6 போட்டிகளில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்குள் நுழைந்துவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைய மல்லுக்கட்டி வருகின்றன.

இலங்கையை வீழ்த்திய வங்கதேசம்

இந்த நிலையில், நேற்று (நவ.6) தொடரின் 38வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. உலகக்கோப்பையில் இருந்து இரண்டு அணிகளும் வெளியேறிய நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இடத்துக்கு இரு அணிகளும் போட்டியிட்டன. அதாவது, இந்த உலகக்கோப்பையில் டாப் 8 இடங்கள் பிடிக்கும் அணிகள்தான் அந்தத் தொடருக்குத் தகுதி பெறும். இதையடுத்தே அவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டி முக்கியமானதாக இருந்தது. இப்படியான நெருக்கடியில்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி, 41.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

146 ஆண்டுக்கால வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த மேத்யூஸ்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நேற்றைய போட்டியின்போது 24.2 ஓவர்களில் இலங்கை அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. கடைசியாக சதீரா சமரவிக்ரமா விக்கெட்டை இழந்திருந்தார். இவருக்குப் பின் ஏஞ்சலா மேத்யூஸ் களம் இறங்க வேண்டும். அதாவது ஒரு விக்கெட் விழுந்த பிறகு புதிதாக களமிறங்கும் அல்லது ஏற்கெனவே களத்தில் உள்ள வீரர், அடுத்த 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் பந்தை எதிர்கொள்ள வேண்டும். தவறினால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படும். அந்த வகையில் சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, மேத்யூஸ் களமிறங்கினார்.

ஆனால், அவர் அணிந்து வந்த ஹெல்மெட் சரியில்லாததால், மேத்யூஸ் அதை மாற்ற முயன்றார். ஆனால், கிரீஸிற்கு வர மேத்யூஸ் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதாக வங்கதேச வீரர்கள் முறையிட, அவர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். அதாவது, கிரிஸுக்குள் வந்த மேத்யூஸ் மீண்டும் ஹெல்மெட்டை மாற்ற கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்த வகையில் அவுட்டான முதல் சர்வதேச வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் இடம்பிடித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஷகிப் அல் ஹசன் செய்தது சரியா தவறா என விவாதமும் தொடங்கியுள்ளது. ’ஒருமுறை மேத்யூஸ்க்கு எச்சரிக்கை கொடுத்து ஆடச் செய்து இருக்கலாம்’ என ஒருதரப்பும், ’இப்படி ஒரு விதி இருப்பதை நன்கு அறிந்து அதனை சரியான நேரத்தில் ஒரு வீரராக பயன்படுத்தியுள்ளார்; அதனால் அவர் செய்தது சரி’ என மற்றொரு தரப்பும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த மேத்யூஸ்

இதுகுறித்து சர்ச்சை கிளம்பிய நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ், வீடியோவுடன் விளக்கியிருந்தார். ’விளையாடுவதற்கு முன்பாக ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. இதன்படி, நான்காவது நடுவர் வழங்கிய தீர்ப்பு தவறானது. மேலும், ஹெல்மெட் அணிந்து, மட்டைப் பிடித்து விளையாட தயாராகி ஐந்து விநாடிகள் எஞ்சியிருந்தது என்பதை வீடியோ காணொளி மூலம் உறுதிப்படுத்த முடியும்’ என ஏஞ்சலோ மேத்யூஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். முன்னதாக இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூஸ், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. 2 நிமிடத்தில்தான் மைதானத்திற்குள் வந்தேன். ஹெல்மெட்டில் இருந்த பிரச்னை காரணமாக மாற்றச் சென்றதால் காலதாமதம் ஏற்பட்டது. வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் எனக் கூறும்போது இது எப்படி தவறாகும்? ஹெல்மெட் இல்லாமல் விளையாடலாமா” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக், ஏஞ்சலோ மேத்யூஸ்
146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த மேத்யூஸ்! Timed Out - விதி என்ன?

மேத்யூஸ் அவுட் குறித்து பேசிய வங்கதேச கேப்டன்

இச்சம்பவம் குறித்து பேசிய ஷகிப் அல் ஹசன், “ஐசிசி விதிகளின் படி 2 நிமிடத்தில் BAT, PAD, HELMET என அனைத்துடனும் பேட்டர் களத்தில் இருக்க வேண்டும். எனவே, இச்சம்பவம் குறித்து நான் கவலைப்படவில்லை. விதியின்படியே செயல்பட்டேன். இது விமர்சிக்கப்படுமானால், ஐசிசி விதியை மாற்றிக் கொள்ளட்டும்” என்று பதிலளித்துச் சென்றார்.

மேத்யூஸ்க்கு அவுட் வழங்கப்பட்டது எப்படி? - நடுவர் விளக்கம்

இந்த நிலையில், நடுவர் ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக் (Adrian Holdstock) இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், 'இந்த உலகக்கோப்பை தொடர் எம்.சி.சியின் கிரிக்கெட் விதிப்படிதான் நடந்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம். டைம் அவுட் விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள இரண்டு நிமிடத்தில் தயாராக வேண்டும். எப்போதுமே ஒரு வீரர் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த வீரர் இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வருகிறாரா இல்லையா என்பதை வீடியோ மூலம் மூன்றாம் நடுவர்கள் சோதனை செய்வார்கள்.

ஆனால், இன்று மேத்யூஸ் களத்திற்கு வருவதற்கு இரண்டு நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டார். இதனை பங்களாதேஸ் அணி சுட்டிக்காட்டியவுடன் வீடியோ ஆதாரத்தை பார்த்து தான் மூன்றாம் நடுவர்கள் களத்தில் இருக்கும் நடுவருக்கு அவுட் வழங்கலாம் என்று கூறினார்கள். 'மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து விட்டது. அதனால் நான் மாற்றச் செல்கிறேன்' என்று கூறுகிறார்.

ஆனால், மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து விட்டது என்று கூறுவதற்கு முன்பே, அவர் இரண்டு நிமிடத்தை தாண்டிவிட்டார். இதனால்தான் நாங்கள் மேத்யூஸ்க்கு அவுட் வழங்கினோம்' என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: இலங்கை: மலையகத் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதா?

முன்னதாக இதுகுறித்து சில வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “இப்படி ஒரு அவுட் கொடுக்கப்பட்டது சரியான விஷயம் கிடையாது. இது சர்வதேச கிரிக்கெட். இது ஒன்றும் ஜோக் இல்லை. பனி மற்றும் வீரர்கள் கீழே விழுவது போன்ற விஷயங்களுக்கு நிறைய நேரங்கள் கொடுக்கப்படுகிறது. இதில் கொடுக்கப்பட்டால் என்ன தவறு? நடுவர்கள் இந்த விஷயத்தில் இப்படி நடந்திருக்கக் கூடாது. அங்கு நேரம் முடிந்து இருந்தாலும்கூட நோக்கம் என்ன என்பதை பார்த்து அதற்கு தகுந்தவாறு தீர்ப்பை மாற்றி இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று மக்களுக்கு முதலில் புரிய வேண்டும். அவர்களை இந்த மாதிரியான விஷயங்களில் குழப்பத்தில் வைக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக், தன்னுடைய அணியின் வீரர் ஒருவர் நேரம் முடிந்து விட்டதாக தன்னிடம் கூறியதால் தான் அப்பீல் செய்ததாக ஷாகிப் கூறியிருந்தார். அதே ஃபீல்டர் மேத்யூஸ் ஹெல்மெட்டில் உள்பட்டை அறுந்தபொழுது தான் இதை போய் ஷாகிப் இடம் கூறியிருக்கிறார். ஏன் இப்படி ஒரு விதியை அதற்கு முன்பாகவே அவர் தன் கேப்டனிடம் சொல்லவில்லை? ஹெல்மெட்டை அந்த நேரத்தில் மாற்றிதானே ஆகவேண்டும். அவர் இதை பயன்படுத்திக் கொள்ள பார்த்திருக்கிறார். யோசித்துப் பாருங்கள். யார் என்ன சொன்னாலும் ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு பார்வை இருக்கும். நான் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் இதற்காக நான் மேல்முறையீடு செய்திருக்க மாட்டேன். ஹெல்மெட் பழுதடைதல் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க: சர்ச்சைக்குரிய வகையில் அவுட்: ஏஞ்சலோ மேத்யூஸ் விமர்சனமும் ஷகிப் அல் ஹசன் பதிலும்

கிரிக்கெட்டை பொறுத்தவரை இரண்டு விதமான விஷயங்கள் இருக்கிறது. ஒன்று Spirit of Game.. மற்றொன்று Rules. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளின் ஆன்மா என்பது எப்பொழுதுமே அதன் ஜெண்டில்மேன் தன்மையில் தான் இருக்கிறது. களத்தில் எந்த அளவிற்கு பெருந்தன்மையாகவும், எதிரணி வீரர்களின் இணக்கமாவும் இருக்கிறோம் என்பதில் தான் அந்த ஜெண்டில்மேன் தன்மை இருக்கிறது. விதிமுறை என்பது முக்கியமானது தான். அதுதான் ஆட்டத்தை மிகவும் நேர்த்தியானதாகவும் தொழில் முறையானதாகவும் மாற்றுகிறது. ஆனாலும் தொழில்நுட்பம் இந்த அளவிற்கு வளராத காலத்திலும் விளையாட்டுப் போட்டிகளில் முடிவுகள் அவ்வளவு துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை. அத்தகைய தருணங்களில் வீரர்களின் பெருந்தன்மையாக பண்புகள் தான் விளையாட்டை இந்த அளவிற்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது. அதனால், ஷகிப் செய்தது நிச்சயமாக தவறில்லை. ஆனாலும், ஒரு சிறிய எச்சரிக்கை கொடுத்து இருக்கலாம். நேர மேலாண்மையின் முக்கியத்துவம் கருதிதான் இதுபோன்ற விதிகள் வகுக்கப்படுகிறது. அதனை விடவும் வீரர்கள் நடத்தப்படுவது மிகவும் முக்கியமானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com