ஜிம்பாப்வே - இலங்கை
ஜிம்பாப்வே - இலங்கைweb

இலங்கைக்கு மரண பயம் காட்டிய ஜிம்பாப்வே.. இறுதி ஓவரில் நடந்த ட்விஸ்ட்! 7 ரன்னில் த்ரில் வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மரண பயம்காட்டிய ஜிம்பாப்வே அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.
Published on
Summary

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது இலங்கை அணி.

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி இன்று ஜிம்பாப்வேவில் தொடங்கிய நிலையில், அசலங்கா தலைமையிலான இலங்கை அணியும், சீன் வில்லியம்ஸ் தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இலங்கைக்கு மரணபயம் காட்டிய ஜிம்பாப்வே..

பரபரப்பாக தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவரில் 298 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பேட்டிங் செய்த நிசாங்கா 76, ஜனித் லியானகே 70 மற்றும் கமிந்து மெண்டீஸ் 57 ரன்களும் அடித்து அசத்தினர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து மோசமாக தொடங்கியது. ஆனால் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சீன் வில்லியம்ஸ் மற்றும் தொடக்க வீரர் பென் கர்ரன் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

பென் கர்ரன் 70 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 57 ரன்களும் அடிக்க 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். அதற்கு பிறகு வந்த சிக்கந்தர் ராசா வெறித்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருக்கு பக்கதுணையாக பவுலிங் ஆல்ரவுண்டர் டோனி முனியோங்காவும் அசத்தலாக விளையாட 49 ஓவர் முடிவில் 289/5 என்ற வலுவான நிலையில் இருந்தது ஜிம்பாப்வே.

கடைசி ஓவரில் 6 பந்துக்கு 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது 92 ரன்னில் களத்தில் இருந்தார் சிக்கந்தர் ராசார். எப்படியும் ஜிம்பாப்வே தான் வெற்றிபெற போகிறது என்ற நிலை இருக்க, இறுதிஓவரை வீசிய தில்சன் மதுசங்கா ஓவரின் முதல் பந்திலேயே சிக்கந்தரை போல்டாக்கி இலங்கை ரசிகர்களை பெருமூச்சுவிடவைத்தார். தொடர்ந்து வந்த வீரர்களையும் அடுத்தடுத்து வெளியேற்றிய மதுசங்கா ஹாட் - ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இறுதிவரை பரபரப்புடன் சென்ற போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com