வாழ்வா சாவா போட்டியில் ’இலங்கை vs பாகிஸ்தான்’.. 5-0 என ஆதிக்கம் செலுத்தும் இலங்கை! வெல்லுமா PAK?
பாகிஸ்தானுக்கு எதிராக 5-0 என தொடர் வெற்றியை ருசித்துள்ள இலங்கை அணி, இன்றைய ஆசிய கோப்பை போட்டியிலும் வெற்றியை தொடருமா? அல்லது பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
2025 ஆசியக்கோப்பை தொடரானது முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஒரு தோல்வி கூட அடையாமல் ஒருபக்கம் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தோல்விக்கு பிறகு வெற்றிபெற்ற ஆகவேண்டிய மோதலில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
சூப்பர் 4 சுற்று மோதலில் பாகிஸ்தான் இந்தியாவிடமும், இலங்கை வங்கதேசத்திடமும் தோல்வியுற்றன. இரண்டு தோல்விக்கு பிறகு வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் இன்று மோதுகின்றன.
இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பில் உயிர்ப்புடன் இருக்கும், மற்ற அணி ரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகளின் தோல்வியை பொறுத்த வாய்ப்பை பெறும்நிலைக்கு செல்லும்.
5-0 என ஆதிக்கம் செலுத்தும் இலங்கை..
2025 ஆசியக்கோப்பையை பொறுத்தவரையில் பாகிஸ்தான் - இலங்கை இரண்டு அணிகளிடமும் நிறைகுறைகள் உள்ளன. பாகிஸ்தான் தங்களுடைய வேகப்பந்துவீச்சை மெருகேற்றி, நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதேநேரத்தில் இலங்கை அணி தங்களுடைய ப்ரைம் பவுலர்களான பதிரானா மற்றும் தீக்ஷனா இருவரையும் அணிக்குள் கொண்டுவந்து, தங்களுடைய சுழற்பந்துவீச்சை பலப்படுத்தி, பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பாகிஸ்தானுக்கு சவால் கொடுக்க முடியும்..
இரண்டு அணிகளின் டி20 மோதலை பொறுத்தவரையில், 23 போட்டிகள் மோதலில் 13 முறை பாகிஸ்தானும், 8 முறை இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன. ஆனால் 2022 முதல் கடைசி 5 மோதல்களில் 5-0 என வெற்றிபெற்று இலங்கை அணியே ஆதிக்கம் செலுத்திவருகிறது. பாகிஸ்தான் அணி தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேநேரம் சனத் ஜெயசூர்யா தலைமையில் இளம்வீரர்கள் அடங்கிய இலங்கை அணி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் நிலையில், 2025 ஆசியக்கோப்பை தொடரிலும் இலங்கை அணி வெற்றியை தொடரும் என இலங்கை ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்துவருகின்றனர்.