கடைசி நிமிடம் வரை டஃப் கொடுத்த நெதர்லாந்து.. ஒருவழியாக முதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை அணி!

தொடர்ச்சியான 3 தோல்விகளுக்கு பிறகு நடப்பு உலகக்கோப்பையின் முதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை அணி.
Sl vs Ned
Sl vs NedTwitter

ஒரு உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வெல்வது எல்லாம் பெரிதாக எந்த அணியும் செய்து நாம் பார்க்காதது. ஆனால் 1996 உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வென்ற இலங்கை அணி அதை செய்துகாட்டி கெத்துகாட்டியது. அதற்கு பிறகு 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரில் ஃபைனல் வரை முன்னேறியிருந்த இலங்கை அணி, தான் ஒரு சாம்பியன் அணி என்பதை தொடர்ந்து நிரூபித்து காட்டியது. ஆனால் நடப்பு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடர் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் நெதர்லாந்து அணி, உலகக்கோப்பை வெல்லக்கூடிய அணியாக பார்க்கப்படும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து பெரிய அப்செட்டை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்தின.

சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய ரஜிதா!

3 தோல்விகளுக்கு பிறகு முதல்வெற்றியை தேடி இலங்கை அணி களமிறங்க, டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. உலகக்கோப்பையின் இரண்டாவது வெற்றியை தேடிய நெதர்லாந்து அணிக்கு, இலங்கை பந்துவீச்சாளர்கள் டஃப் கொடுத்தனர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை வேகப்பந்துவீச்சாளர் ரஜிதா, நெதர்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்களை நிற்கவே விடாமல் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார். 54 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெதர்லாந்து அணியை எழவே விடாத மதுஷங்கா, கடந்த போட்டியில் வெளிப்படுத்திய அதே அட்டாக்கிங் பந்துவீச்சை இந்த போட்டியிலும் வெளிப்படுத்தினார். பாஸ் டி லீடே, தேஜா இருவரையும் விரைவாகவே மதுஷங்கா வெளியேற்ற, கடந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜொலித்த நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸை 16 ரன்னில் வெளியேற்றினார் தீக்‌ஷனா.

Rajitha
Rajitha

இலங்கையின் அசத்தலான பந்துவீச்சால் 91 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி, எப்படியும் 150 ரன்களுக்குள் சுருண்டு விடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது தான் களத்திற்கு வந்தனர் சைப்ரண்ட் மற்றும் வான் பீக் இருவரும். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, பின்னர் அதிரடிக்கு திரும்பியது.

ned vs sl
ned vs sl

5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட இவர்கள், நெதர்லாந்து அணியை 200 ரன்களை கடந்து அழைத்துச்சென்றனர். சைப்ரண்ட் மற்றும் வான் பீக் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த, முதல் இன்னிங்ஸின் முடிவில் 262 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது நெதர்லாந்து அணி.

முதல் வெற்றியை பதிவுசெய்த இலங்கை!

263 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரரான பதும் மதுஷங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த இரண்டு போட்டிகளை தொடர்ந்து இந்த போட்டியிலும் அரைசதம் கடந்த இவர் ஒரு நல்ல தொடக்கத்தை இலங்கைக்கு ஏற்படுத்தி கொடுத்து வெளியேறினார். பின்னர் என்ன தான் இடையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய சதீரா மற்றும் அசலங்கா இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Pathum Nissanka
Pathum Nissanka

அசலங்கா 44 ரன்களுடன், டி சில்வா 30 ரன்கள் அடித்து வெளியேற, கடைசிவரை களத்தில் நின்று அரைசதம் அடித்த சதீரா 91 ரன்கள் அடித்து இலங்கையை வெற்றிக்கு அழைத்து சென்றார். தொடர்ச்சியான 3 தோல்விகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பையின் முதல்வெற்றியை பதிவு செய்து அசத்தியது இலங்கை அணி.

கபில் தேவ் சாதனையை முறியடித்த நெதர்லாந்து வீரர்கள்!

இந்த போட்டியில் 7வது விக்கெட்டுக்கு களமிறங்கி 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட சைப்ரண்ட் மற்றும் வான் பீக் ஜோடி, உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. 7வது விக்கெட் அல்லது அதற்கு கீழான விக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும், இதற்கு முன்பு 40 வருடங்களுக்கு முன் கபில்தேவ் மற்றும் கிர்மனி அடித்த 126 ரன்களே 7வது விக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாக இருந்தது. நாளைய போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com