55 ரன்னில் ஆல் அவுட்.. பும்ரா, சிராஜ், ஷமி வேகத்தில் வீழ்ந்தது இலங்கை.. இந்தியா இமாலய வெற்றி!
2011 உலகக்கோப்பைக்கு பிறகு 12 வருடங்களுக்கு பின் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா விரைவாகவே வெளியேறினாலும், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். சதத்தை நோக்கி நகர்ந்த இரண்டு வீரர்களும் சதத்தை தவறவிட்டு கில் 92 ரன்னிலும், கோலி 88 ரன்னிலும் நடையை கட்டினர்.
பின்னர் களமிறங்கிய கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சிகொடுக்க, இறுதிவரை களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 சிக்சர்களை பறக்கவிட்ட ஸ்ரேயாஸ், உலகக்கோப்பை இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 82 ரன்களில் வெளியேற, கடைசியில் 35 ரன்கள் அடித்த ரவிந்திர ஜடேஜா இந்தியாவை 357 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.
இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை!
358 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிராக, இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி மூன்று பேரும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பதும் நிஷாங்காவை கோல்டன் டக்கில் வெளியேற்றிய ஜஸ்பிரித் பும்ரா, உலகக்கோப்பையில் புதிய சாதனையை படைத்து அசத்தினார். ஒரு உலகக்கோப்பை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய பவுலராக சாதனை படைத்துள்ளார் பும்ரா.
பும்ரா ஒருபுறம் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்த, இரண்டாவது ஓவரை வீசவந்த முகமது சிராஜ் பும்ராவிற்கு ஒருபடி மேலே சென்று ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி மிரட்டிவிட்டார். அடுத்தடுத்து கோல்டன் டக்கில் வெளியேறிய இலங்கை ஓப்பனர்கள் நிஷாங்கா மற்றும் கருணரத்னே இருவரும் ஒரு மோசமான சாதனையில் இணைந்தனர்.
2 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறிய இலங்கை அணிக்கு, மீண்டும் குஷால் மெண்டீஸை 1 ரன்னில் வெளியேற்றிய சிராஜ் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார். 3 ரன்களுக்கே 4 விக்கெட்டை இழந்து இலங்கை நிலைகுலைய, அடுத்து களத்திற்கு மூத்தவீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்.
ஆனால் பும்ரா, சிராஜ் இருவரும் போக மூன்றாவதாக பந்துவீச முகமது ஷமியும், அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்துவர 14 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலைக்கே சென்றது இலங்கை அணி.
மீண்டும் பந்துவீச வந்த முகமது ஷமி அடுத்த விக்கெட்டை வீழ்த்த, 12 ஓவரில் 22 ரன்களுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்தது.
சற்று நேரம் போராடி வந்த மேத்யூஸை 12 ரன்னில் க்ளீன் போல்ட் ஆக்கினார் ஷமி. இறுதியில் இலங்கை அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். சிராஜ் 3, பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முகமது ஷமி செய்த சாதனை!
உலகக்கோப்பை வரலாற்றில் தனது 45 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் முகமது ஷமி. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.