மொத்தமாக கலைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம்.. தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நீண்டகால தலைவர் ஷம்மி சில்வா மீது வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கடும் எதிர்ப்புகள், அணியின் சர்வதேச தோல்விகள், தரவரிசை சரிவு ஆகியவற்றைத் தொடர்ந்து, ஜனாதிபதி தலையீட்டில் வாரியத் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். இது கிரிக்கெட் நிர்வாகத்தில் முழுமையான மாற்றத்திற்கான முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட்டின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் நோக்கத்தில், இலங்கை அரசாங்கம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தற்காலிகமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஷம்மி சில்வா தேர்வுசெய்யப்பட்டதற்கு பிறகு, தொடர்ந்து 2021, 2023, 2025 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் போட்டியின்றி தலைவராக தேர்வானார்.
இந்தசூழலில் அவரின் கீழ் ஆசிய கோப்பைகளை இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணி வென்ற போதிலும், ஐசிசி தொடர்களில் மோசமாக செயல்பட்டது. அதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியலிலும் இலங்கை அணி பெரிய சரிவை கண்டது.
இந்நிலையில் தான் வீரர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும், சில்வாவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற எதிர்க்குரல்கள் அதிகமாக ஒலித்துவந்தன.
மொத்தமாக ராஜினாமா செய்த உறுப்பினர்கள்..
அதிகமான எதிர்ப்பு குரலுக்கிடையில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை ஷம்மி சில்வா சந்தித்து பேசிய நிலையில், தேசிய கிரிக்கெட் அமைப்பில் ஆட்சி மாற்றம் தேவை என வலியுறுத்தியதால் இலங்கை வாரிய தலைவர் ஷம்மி சில்வா உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இது இலங்கை கிரிக்கெட்டின் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் முழுமையாக கலைக்கப்பட்டதை தொடர்ந்து இடைக்கால நிர்வாக குழு விரைவில் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பொறுப்பு விளையாட்டுத் துறை கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே வசம் வந்துள்ளது.

