T20 WC | BCCI - BCB கிரிக்கெட் விவகாரம்.. தீர்வுக்குப் பின் மவுனம் கலைத்த இலங்கை!
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் விவகாரத்தில், டி20 தொடரை இணைந்து நடத்தும் இலங்கை அணி இதுநாள் வரை மவுனம் காத்து வந்தந்து. தற்போது அதைக் கலைத்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறிய நாடுகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்தது.
இதற்கிடையே, வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானும் டி20 தொடரைப் புறக்கணிக்கலாம் அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாடாமல் இருக்க முடிவு செய்யலாம் என ஊகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐசிசி, பிசிசிஐ, பிசிபி ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அணி இதிலிருந்து பின்வாங்க வழியில்லை எனவும், அது ஏற்கெனவே இலங்கைக்குச் செல்ல தயாராகி விட்டதாகவும் தகவலகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் விவகாரத்தில், டி20 தொடரை இணைந்து நடத்தும் இலங்கை அணி இதுநாள் வரை மவுனம் காத்து வந்தந்து. தற்போது அதைக் கலைத்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் பந்துல திசாநாயக்க, "இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான இந்தச் சச்சரவுகளில் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம்; இவை அனைத்தும் நட்பு நாடுகள். இருப்பினும், இந்த நாடுகளில் எந்தவொரு நாட்டிற்கும் எதிர்காலப் போட்டிகளை நடத்த இலங்கை தயாராக இருக்கும்” என ஊடகம் ஒன்றிற்கு அவர் தெரிவித்துள்ளார்.

