ஆசியக்கோப்பை: டஃப் கொடுத்த வங்கதேசம்.. 165 ரன்கள் இலக்கையே போராடி வென்றது இலங்கை அணி !

ஆசியக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
srilanka team
srilanka teamicc twitter

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கு பெற்றுள்ள 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தானில் தொடங்கியது. இதன் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. இந்த நிலையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் இன்று (ஆகஸ்ட் 31) பலப்பரீட்சை நடத்தின.

twitter

இன்றையப் போட்டியில் முதலில் டாஸ் ஜெயித்த வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி தொடக்க பேட்டர் தன்ஷித் ஹாசன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, மற்றொரு தொடக்க பேட்டரான முகம்மது நயிம் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், அணியின் சரிவைப் போக்கும் வகையில் களமிறங்கிய சாண்டோ, நிலைத்து நின்று விளையாடத் தொடங்கினார். ஆனால், அவருக்கு எந்த வீரர்களும் ஒத்துழைப்பு கொடுக்காததால் அந்த அணி குறைவான ரன்களை நோக்கிப் பயணித்தது. இடையிடையே விக்கெட்களையும் தாரைவார்த்துக் கொண்டே இருந்தது.

அந்த அணி சரிவைச் சந்திப்பதற்கு முக்கியக் காரணம் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சாகும். இதனால் அந்த அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக சாண்டோ 89 ரன்களைக் குவித்ததுடன், அதன்மூலமும் இரண்டு சாதனைகளைப் படைத்தார். இலங்கை அணி தரப்பில் குட்டி மலிங்கா என்றழைக்கப்படும் மதீஷா பத்திரனா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

icc twitter

பின்னர், சுலபமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியும் வங்கதேச பந்துவீச்சுக்கு இரையானது. அவ்வணியினர் நடத்திய துல்லியமான பந்துவீச்சால் இலங்கை அணி ஆரம்பத்திலேயே முதல் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர் சதீராவும், அசலங்காவும் இணைந்து அணியைத் தாங்கிப் பிடித்ததுடன், வெற்றி இலக்கை விரட்டுவதற்கான ரன்களையும் சேகரித்துத் தந்தனர்.

icc twitter

இறுதியில் இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து கடுமையாகப் போராடியே வெற்றி பெற்றது. அவ்வணி, 39 ஓவர்களில் 165 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சதீரா 54 ரன்களையும், அசலங்கா 62 ரன்களையும் எடுத்தனர். இறுதிவரை களத்தில் இருந்த அசலங்கா இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். வங்கதேசம் தரப்பில் கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com