T20 WC | அணியை வலுப்படுத்த தீவிரம்.. இந்திய பயிற்சியாளரைத் தட்டித் தூக்கிய இலங்கை!
டி20 உலகக் கோப்பைக்கான புதிய பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்காக 20 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இந்திய பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதிய பேட்டிங் ஆலோசகராக நியமித்துள்ளது. இன்று முறைப்படி நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ரத்தோர், ஜனவரி 18ஆம் தேதி அவ்வணியின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
மேலும் அவரது ஒப்பந்தம் டி20 உலகக் கோப்பை முடிவடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மார்ச் 10 வரை நீடிக்கும். இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என அழைக்கப்படும், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அந்தக் குழுவில் ரத்தோரும் பங்கு வகித்தார். செப்டம்பர் 2019 முதல் ஜூலை 2024 வரை அவர் அந்தப் பொறுப்பில் பணியாற்றினார். குறிப்பாக, இந்தியா 2023 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தர் இந்த ரத்தோர். 2024 டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறிய நிலையில், அந்த ஏமாற்றத்தை சரிசெய்ய விக்ரம் ரத்தோரை நியமித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி பிப்ரவரி 8 ஆம் தேதி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியைச் சந்திக்க உள்ளது.

