கன்னத்தில் அறை.. 17 ஆண்டுகளுக்குப் பின் வீடியோ வெளியீடு.. லலித் மோடியைச் சாடிய ஸ்ரீசாந்த் மனைவி!
ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோவை அப்போதைய ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி தற்போது வெளியிட்டிருப்பதற்கு ஸ்ரீசாந்தின் மனைவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த ஹர்பஜன் சிங்
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் சாதனைகளுடன் சர்ச்சைகளும் இடம்பிடிக்கும். அந்த வகையில், 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. வீரர்கள் பரஸ்பர கைகுலுக்கலில் ஈடுபட்டனர். அப்போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீசாந்த் கண்ணீர்விட்டார். அப்போதைய அவரது கேப்டனும் இலங்கை ஜாம்பவானுமான மஹேலா ஜெயவர்தனே அவருக்கு ஆறுதல் கூறினார். எனினும், இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்
பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "என் வாழ்க்கையில் நான் மாற்ற விரும்பும் ஒரு விஷயம் ஸ்ரீசாந்துடனான அந்தச் சம்பவம். அதை, என் வாழ்க்கையிலிருந்து நீக்க விரும்புகிறேன். நடந்தது தவறு, நான் அதைச் செய்திருக்கக்கூடாது. நான் 200 முறை மன்னிப்பு கேட்டேன். அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் பல வருடங்கள் கழித்தும், எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பின்போதும் மன்னிப்பு கேட்டு வருகிறேன் என்பதுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அது ஒரு தவறு" என்று கூறியிருந்தார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு வீடியோவை வெளியிட்ட லலித் மோடி
இருந்தபோதிலும் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீசாந்தை, ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை அப்போதைய ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி வெளியிட்டுள்ளார். இவர் மீது பணமோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது லலித் மோடி இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லலித் மோடி - கிளாக்கைச் சாடிய ஸ்ரீசாந்த் மனைவி
மறுபுறம், 'அறைந்த' வீடியோவை வெளியிட்டதற்காக லலித் மோடி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் ஆகியோரை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "@lalitkmodi மற்றும் @michaelclarkeofficial உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். உங்கள் சொந்த மலிவான விளம்பரம் மற்றும் கருத்துகளுக்காக 2008இல் நடந்த ஒன்றை இழுக்க நீங்கள் மனிதர்கள்கூட இல்லை. @sreesanthnair36 மற்றும் ஹர்பஜன் இருவரும் நீண்டகாலமாக மாறிவிட்டனர். அவர்கள் இப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகக்குத் தந்தையாகிவிட்டனர். ஆனாலும் நீங்கள் அவர்களை மீண்டும் ஒரு பழைய காயத்தில் தள்ள முயற்சிக்கிறீர்கள். முற்றிலும் அருவருப்பானது, இதயமற்றது மற்றும் மனிதாபிமானமற்றது. அந்தக் காட்சிகள் வெளிவந்தது தனது குடும்பத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள், வீரர்களை காயப்படுத்தியதற்காக மட்டுமல்லாமல், இப்போது அவர்கள் செய்யாத தவறுக்காக கேள்விகளையும் அவமானத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர்களின் அப்பாவி குழந்தைகளை காயப்படுத்தியதற்காக இருவரும் மீது வழக்குத் தொடர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.