கடைசி நாளில் வெற்றிபெறப் போவது யார்? ஆஸிக்கு தேவை 288 ரன்கள்.. SA-க்கு தேவை 10 விக்கெட்டுகள்!
கடைசி நாளில் ஆஸ்திரேலியாவுக்கு 288 ரன்கள் தேவை, தென்னாப்பிரிக்காவுக்கு 10 விக்கெட்டுகள் தேவை. தொடரின் முடிவை தீர்மானிக்கும் விறுவிறுப்பான ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
3 போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் நீடிக்கிறது. இந்நிலையில் தொடரை முடிவுசெய்யும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அக்கர்மேன், மார்கரமின் அரைசதத்தில் உதவியால் 329 ரன்கள் அடித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ஜோஷ் இங்கிலீஸின் சதத்தால் 429 ரன்கள் குவித்தது.
100 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 181 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிக்கல்டன் மற்றும் முல்டர் இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர்.
அடுத்தடுத்து இருவரும் சதமடித்து அசத்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா தடுமாறியது. ஆனால் கடைசிநேரத்தில் ரிக்கல்டன் சதமடித்த பிறகு ரன் அவுட்டாக ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்தது. ரிக்கல்டன் 101 ரன்களும், முல்டர் 115 ரன்களும் அடித்து அசத்த தென்னாப்பிரிக்கா 387 ரன்கள் சேர்த்தது.
இந்தசூழலில் 4நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், கடைசி நாளில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 288 ரன்களும், தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 10 விக்கெட்டுகளும் தேவையாக இருக்கிறது. யார் தொடரை வெல்வார்கள் என்ற விறுவிறுப்பான ஆட்டம் நாளை காத்திருக்கிறது.

