துல்லிய தாக்குதல்: நிலைகுலைந்த இந்திய வீரர்கள்.. இன்னிங்ஸுடன் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
sa vs ind test
sa vs ind testtwitter

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா, முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ரன்களை எடுத்தது. இதில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபேடா 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா, 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அவ்வணியில் அதிகபட்சமாக எல்கர் 185 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததுபோலவே ரோகித் சர்மா (0) மற்றும் ஜெய்ஷ்வால் (5) ஆகியோர் ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழந்தனர். அவர்கள் பின்வந்த சுப்மன் கில், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிலைத்து நிற்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 26 ரன்களுக்கு மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேநேரத்தில், விராட் கோலி மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தாலும், அவரும் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக ஒருவர்கூட பார்ட்னர்ஷிப் அமைக்க மறுமுனையில் நிற்கவில்லை. குறிப்பாக, பின்னர் வந்த வீரர்கள் எவரும் நிலைத்துநின்று ஆடவில்லை.

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கே.எல்.ராகுல்கூட, 4 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. தொடர்ந்து அவருக்குப் பின்னும் வீரர்கள் சீட்டுக்கட்டாய்ச் சரிந்தனர். தென்னாப்பிரிக்க வீரர்கள் துல்லிய தாக்குதல் நடத்தி, இந்திய வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தியபடியே இருந்தனர். இதனால் இந்திய அணி, 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. தென்னாப்பிரிக்க அணியில் பர்கர் அதிகபட்சமாய் 4 விக்கெட்களையும் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com