’ஒவ்வொரு போட்டியும் முக்கியம்..’ தொடர்ந்து 3 வீரர்கள் சதம்.. 575 ரன்கள் குவித்து டிக்ளார் செய்த SA!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான ரேஸில் தென்னாப்பிரிக்கா அணி உயிர்ப்புடன் இருக்கிறது. சொந்த மண்ணில் இந்திய அணியின் தோல்வி அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து முதலிய அணிகளுக்கு சாதகமாக மாறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா மீதமிருக்கும் 5 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்பதால் நம்பிக்கையுடன் விளையாடிவருகிறது.
அதனை சாத்தியப்படுத்தும் வகையில் வங்கதேச மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றும் நிலையில் இருக்கிறது.
3 வீரர்கள் சதம்.. 575 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா!
2 போட்டிகள் கொண்ட வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் 575 ரன்கள் குவித்து டிக்ளார் செய்துள்ளது.
முதல்நாள் முடிவில் டோனி டி ஷார்சி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் சதமடித்த நிலையில், 2வது நாளான இன்று 8வது வீரராக களமிறங்கிய மல்டர் மெய்டன் சதமடித்து அசத்தினார். டிரஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்கள், டோனி டி ஷார்சி 177 ரன்கள், முல்டர் 105* ரன்கள் என அசத்த 575/6 என்ற நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளார் செய்துள்ளது தென்னாப்பிரிக்கா.
அதன்பிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் வங்கதேச அணி இரண்டாவது நாள் முடிவில் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. WTC பைனலுக்கு செல்லும் ஒவ்வொரு வாய்ப்பையும் அபாரமாக பயன்படுத்திவருகிறது தென்னாப்பிரிக்கா அணி.