SA20 | பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!
தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும், SA20 லீக்கின் புதிய சீசனுக்காக பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியை இந்தக் கட்டுரை தருகிறது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவைப் போன்றே இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் டி20 உள்நாட்டுத் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும், SA20 லீக்கின் புதிய சீசனுக்காக பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் குறித்து அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “கேபிடல்ஸ் முகாமுக்கு ஓர் அரச பிரகாசத்தை கொண்டு வர இளவரசர் தயாராக உள்ளார். எங்கள் புதிய தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
சவுரவ் கங்குலி, பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, எந்தவொரு அணிக்கும் முழுநேரத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ தலைவராகவும் இருந்த கங்குலி, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோனாதன் ட்ராட்டுக்குப் பிறகு அவ்வணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் அமர்வார். பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலியின் முதல் கவனம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் அணிக்கான சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதாகும்.