INDvNZ Womens WC |அரையிறுதிக்கான வாய்ப்பு.. ரன் குவித்த இந்தியா.. சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் நாக் அவுட் போட்டிகளை எட்டியுள்ளது. லீக் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. ஆனால் சொந்தமண்ணில் விளையாடும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்பை எட்டவில்லை. கடைசி 1 அரையிறுதி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை என 3 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த நிலையில்தான் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நவி மும்பையில் தொடங்கியது. இதில் வெற்றிபெறும் அணி, நிச்சயம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும் என்ற நிலையில் இரு அணிகளும் வாழ்வா, சாவா என்ற முறையில் களமிறங்கின.
அதன்படி, இன்றைய போட்டியிலும் டாஸில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் தோல்வியைத் தழுவினார். அவர், இந்த தொடரில் 6 முறை டாஸில் தோற்றுள்ளார். எனினும், இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. கடந்த போட்டியில் நிலைத்து நின்று ஆடியும் கடைசி நேரத்தில் இந்திய அணியை வெற்றிபெற வைக்கமுடியவில்லை என்ற வருத்தம் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மனதில் நிழலாடியபடியே இருந்தது. அதை இன்று பூர்த்திசெய்யும் விதமாக, தன் பேட்டிங்கில் அவசரம் காட்டாமல் விளையாடினார். அவருக்குத் துணையாக மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலும் ஒத்துழைப்பு தந்தார். இருவரும் பொறுமையாக விளையாடியதுடன், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் ஏதுவான பந்துகளை அவ்வபோது பவுண்டரி எல்லைக்கு அனுப்பி ரசிகர்களைக் குஷிப்படுத்தினர்.
இதனால் இந்தியாவின் ரன் வேட்டை அதிகரித்ததுடன் இருவரும் சதமடித்து அசத்தினர். 88 பந்துகளில் சதமடித்த ஸ்மிருதி மந்தனா 33.2 ஓவரில் 109 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மந்தனா இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறினார். அவர், இதுவரை 14 சதங்கள் அடித்துள்ளார். முதல் இடத்தில், ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 15 சதங்களுடன் தொடர்கிறார். மேலும் இந்த ஆண்டில் தனது ஐந்தாவது சதத்தை மந்தனா அடித்துள்ளார். இதன்மூலம் ஓர் ஆண்டில் அதிக சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸின் சாதனையைச் சமன் செய்துள்ளார். அதேபோல், ஒருநாள் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலிலும் மந்தனா இணைந்தார். அவர், இந்த வருடத்தில் 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மந்தனா வெளியேறிய பிறகு, அணிக்குத் திரும்பிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் பட்டையைக் கிளப்பினார். இருவரும் இணைந்து கடைசி நேரத்தில் நியூசிலாந்து பந்துவீச்சைச் சிதறடித்தனர். எனினும் ராவல் 122 ரன்களில் வெளியேறினார்.
அவருக்கு, இது ஒருநாள் போட்டியில் முதல் சதமாகப் பதிவானது. மறுபுறம், ஜெமிமாவுடன் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணைந்தார். 48 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி தொடங்கியபோது 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அந்த கடைசி 1 ஓவரில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்தாலும் 11 ரன்களை எடுத்தது. இதையடுத்து, இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது. பின்னர், 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சிறிதுநேரத்திலேயே மழையைச் சந்தித்தது. இதையடுத்து டக்வொர்த் லீக் விதிப்படி, மீண்டும் ஓவர் குறைக்கப்பட்டது. இதையடுத்து, அவ்வணி 44 ஓவர்களில் 325 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.

