பாகிஸ்தானில் உயிர் பயம்.. நாடுதிரும்ப 8 வீரர்கள் கோரிக்கை.. இலங்கை வாரியத்தின் முடிவால் அதிர்ச்சி!
பாகிஸ்தானில் நடந்துள்ள குண்டுவெடிப்பு காரணமாக 8 இலங்கை வீரர்கள் பாதுகாப்பு கவலையால் நாடு திரும்ப கோரிக்கை வைத்தனர். ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் தொடரை முடிக்குமாறு கேட்டுக்கொண்டது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதுகாப்பு உறுதிமொழி வழங்கப்பட்டதால், மாற்று வீரர்கள் அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை ஆடவர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகளும் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறுகின்றன..
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கடந்த செவ்வாய்கிழமை விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 299 ரன்கள் அடித்த நிலையில், வெற்றிக்காக போராடிய இலங்கை அணி 293 ரன்கள் அடித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது..
தொடரில் 1-0 என பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ராவல்பிண்டி மைதானத்தில் நடக்கவிருக்கிறது..
இந்நிலையில் போட்டி நடைபெறும் ராவல்பிண்டிக்கு அருகே உள்ள இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு கவலை இருப்பதாகவும், உடனடியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் 8 இலங்கை வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்..
வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை வாரியம்..
கடந்த செவ்வாய்கிழமை ராவல்பிண்டிக்கு அருகேயுள்ள இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 8 இலங்கை வீரருக்கு உயிருக்கு பாதுகாப்பான சூழல் இல்லாததால் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்..
இதனால் இரண்டாவது போட்டி ரத்துசெய்யப்பட்டு இலங்கை வீரர்கள் உடனடியாக நாடுதிரும்புவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.. ஆனால் பிரச்னையை தெரிந்துகொண்ட பிறகு இலங்கை வாரியம் எடுத்த முடிவு ஒட்டுமொத்த இலங்கை வீரர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது..
இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”பாகிஸ்தானில் விளையாடிவரும் தேசிய அணியின் பல வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு கவலை காரணமாக நாடு திரும்ப விரும்புவதாக வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டது.. உடனடியாக பாகிஸ்தான் வாரியம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியபிறகு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பு குறித்தும் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது..
அதனால் வீரர்கள் தொடரை இருந்து முடித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.. ஒருவேளை வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால் சுற்றுப்பயணம் தடையின்றி தொடர்வதை உறுதிசெய்ய உடனடியாக மாற்று வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள்.. மேலும் வாரியத்தின் முடிவை மீறி நாடு திரும்பும் வீரர்களின் நடவடிக்கை மீது மதிப்பாய்வு நடத்தி என்னசெய்வதென்ற முடிவு எடுக்கப்படும்” என இலங்கை வாரியம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

