“கேப்டனின் கனவு பந்துவீச்சாளர் சிராஜ்” - கில் பெருமிதம்!
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணி, 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் எளிதில் இங்கிலாந்து வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியின் ஜேமி ஸ்மித், ஓவர்டன், ஜோஷ் டங் ஆகியோர் குறுகிய இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதி விக்கெட்டிற்கு கையில் கட்டுடன் வோக்ஸ் பேட்டிங் ஆட வந்த நிலையில், அவருக்கு ஸ்ட்ரைக் அளிக்கமால், பந்துகளை எதிர்கொண்ட அட்கின்சன், ஒரு சிக்ஸரும் விளாசினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள, அந்த அணி வெற்றி பெற 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், அட்கின்சனை சிராஜ் போல்டாக்கினார். இதன்மூலம் வெற்றியை ருசித்த இந்தியா, தொடரையும் 2க்கு 2 என்ற கணக்கில் சமன் செய்தது. சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக (23) விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பும்ராவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் சிராஜ். 2021-2022 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா 23 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தொடர் முழுவதும் சிராஜ் 1113 பந்துகளை வீசியிருக்கிறார். சிராஜின் பந்துவீச்சு தொடர்பாகப் பேசிய கேப்டன் சுப்மன் கில், “ஒரு கேப்டனின் கனவு பந்துவீச்சாளர் என்றால் அது சிராஜ்தான். ஒவ்வொரு அணியும் அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரைப் பெறவே விரும்புவார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சிராஜின் பந்துவீச்சு தொடர்பாகப் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “சிராஜ் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதையும், அபிமானமும் உண்டு. நாட்டிற்காக விளையாடுவது என்றால் என்ன என்பதற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் தொடர்ந்து நாட்டிற்காக சிறப்பாக செய்கிறார், செய்கிறார், செய்துகொண்டே இருக்கிறார். தனது அணிக்காக அவர் செய்யும் செயல்களுக்காக அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு” எனத் தெரிவித்திருக்கிறார்.
போட்டிக்குப் பின் பேசிய சிராஜ், “லார்ட்ஸ் டெஸ்ட்டில் அடைந்த தோல்வி ஒரு இதயத்தை உடைக்கும் தருணம். ஜட்டு பாய் என்னை ஸ்டிரைட் பேட்டுடன் விளையாடவும், பந்தை பேட்டின் நடுவில் நிறுத்தவும் சொன்னார். என் தந்தையையும், என்னை இங்கு கொண்டு வர அவர் எடுத்த கடின உழைப்பையும் நினைவில் கொள்ளச் சொன்னார். அந்த தோல்வி என்னை மிகவும் பாதித்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.