”இந்தியாவிற்காக விளையாடி ஐசிசி கோப்பை வெல்ல பங்காற்றுவது கனவு..” ஐசிசி விருது வென்ற ஸ்ரேயாஸ் ஐயர்!
ஒருநேரத்தில் பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், திடீரென இந்திய அணியில் எடுக்கப்பட்டு, சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியிலும் இடம்பிடித்தார்.
அங்கு 2025 சாம்பியன்ஸ் டிராபியில் தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்பத்திய ஸ்ரேயாஸ் ஐயர், மிடில் ஆர்டர் பேட்டிங்கை தோளில் தாங்கி வெற்றிக்கான இன்னிங்ஸ்களை அறுவடைசெய்தார். 2 அரைசதங்களுடன் 243 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக தொடரை முடித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கை பாராட்டியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், இந்தியாவை இக்கட்டான நேரங்களில் காப்பாற்று அழைத்துச்சென்றவர் அவர் தான் என்று புகழ்ந்திருந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐசிசி விருது!
சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு, மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆண் கிரிக்கெட்டர் விருதை அறிவித்துள்ளது ஐசிசி.
விருது வென்றது குறித்து பேசியிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், "மார்ச் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த ஆண் கிரிக்கெட்டராக அறிவிக்கப்பட்டதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்தது, குறிப்பாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நாங்கள் வென்ற ஒரு மாதத்தில் கிடைத்திருப்பதை நான் என்றென்றும் போற்றுவேன்.
ஐசிசி போன்ற இவ்வளவு பெரிய மேடையில் இந்தியாவின் வெற்றிக்கு பங்களிக்க முடியும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். முக்கியமாக ரசிகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி, உங்கள் ஆற்றலும் ஊக்கமும் என்னை ஒவ்வொரு அடியிலும் முன்னேறச் செய்கின்றன” என்று ஐசிசி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளார்.