தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சுமாரான ஆட்டம்! ரஞ்சிக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!

ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
shreyas iyer
shreyas iyerCricinfo

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வகையில் ரஞ்சிக்கோப்பையில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் நிலைத்து நின்று விளையாட தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர், 31, 6, 0, 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில், சட்டீஸ்வர் புஜாரா ரஞ்சிக்கோப்பையில் 8வது முறையாக இரட்டை சதமடித்து அசத்தியிருக்கும் நிலையில், தன்னுடைய ஃபார்மை நிரூபிக்கும் வகையில் ரஞ்சிக்கோப்பை தொடரில் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார் ஸ்ரேயாஸ்.

ஸ்ரேயாஸ் இடத்தை தட்டிப்பறிப்பாரா புஜாரா?

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் தொடங்கி முதல் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், முதல் போட்டியிலேயே அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார் சட்டீஸ்வர் புஜாரா. 2022 உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட புஜாரா, ரஞ்சிக்கோப்பையில் 243 ரன்கள் குவித்து தேர்வுக்குழுவை திரும்பி பார்க்கவைத்துள்ளார். ஒருவேளை சட்டீஸ்வர் புஜாரா இந்திய அணிக்கு திரும்பும் பட்சத்தில், சுப்மன் கில் அல்லது ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் கேள்விக்குறியாகும்.

pujara
pujara

இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தன்னுடைய இடத்தை சீல் செய்யும் விதமாக ரஞ்சிக்கோப்பையில் இடம்பிடித்துள்ளார் ஸ்ரேயாஸ். புஜாரா கலக்கிய நிலையில், அஜிங்கியா ரஹானேவும் மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். ரஹானே கேப்டன்சியில் ஆந்திராவுக்கு எதிரான அடுத்தப்போட்டியில் ஸ்ரேயாஸ் விளையாடவுள்ளார். முதல் போட்டியில் பீகாரை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, இரண்டாவது போட்டியில் ஆந்திராவை 12ம் தேதி எதிர்கொள்கிறது.

Shreyas Iyer
Shreyas Iyer

மும்பை அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய் பிஸ்தா, பூபென் லால்வானி, அமோக் பட்கல், சுவேத் பார்கர், பிரசாத் பவார் (கீப்பர்), ஹர்திக் தாமோர் (கீப்பர்), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், அதர்வா அன்கோலேகர், மோஹித் அவஸ்தி, தஹவல் குவாஸ்தி, ராய்ஸ்டன் டயஸ், சில்வெஸ்டர் டிசோசா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com