
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் சோயப் அக்தர் ஆகியோர் களத்திற்கு வெளியேயும் சிறந்த நட்புறவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில், இருவரும் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் அற்புதமான பந்தத்தைப் பற்றி பேசியிருக்கின்றனர்.
இந்நிலையில், முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரான ஷோயப் அக்தரும் ஹர்பஜன் சிங்கும் இணைந்து உரையாடியுள்ளனர். அப்போது, அக்தர் இந்திய வீரரை பாகிஸ்தானுக்கு இரவு உணவு சாப்பிட வருமாறு அழைத்தார்.
ஹர்பஜன் சிங்கை அன்புடன் அழைத்திருக்கும் ஷோயப் அக்தர் பேசுகையில், “எங்களுடன் இரவு உணவு சாப்பிட பஜ்ஜி ஒருநாள் லாகூர் வருவார் என்று நான் நம்புகிறேன். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. உண்மையில் பஜ்ஜி லாகூரை மிகவும் நேசிக்கிறார், இங்கு வரவும் திட்டமிட்டுள்ளார்” என்று அக்தர் கூறியுள்ளார்.
அக்தரின் அழைப்பிற்கு பதில் கூறிய ஹர்பஜன், “லாகூரில் உள்ள கர்தார்பூர் சாஹிப் இப்போது திறக்கப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர், ஆனால் நான் இன்னும் அங்கு செல்லவில்லை. சோயப் என்னை அங்கு வந்து வழிபடும்படி அழைத்துள்ளார். நான் நிச்சயமாக அங்கு செல்வதற்கான ஒரு திட்டத்தை விரைவில் செய்வேன்" என்று கூறினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் கத்தாரில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் கூட ஹர்பஜனும், அக்தரும் இணைந்து விளையாடியிருந்தனர்.
2011 உலகக்கோப்பையின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி மோதல் குறித்து பேசியிருக்கும் ஷோயப் அக்தர், வரலாற்று போட்டியான அதில் பங்கேற்காதது குறித்து விவரம் தெரிவித்தார். மொஹாலியில் நடந்த 2011 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிபோட்டியில் பாகிஸ்தான் அணியில் ஷோயப் அக்தர் இடம்பெற்றிருந்த போதும் இந்தியாவிற்கு எதிராக அவர் களமிறக்கப்படவில்லை.
எப்போதைக்கும் சிறந்த அரையிறுதிப்போட்டி குறித்து பேசிய அவர், “உண்மையில் ஷாஹித் அப்ரிடி என்னை தேர்வு செய்ய விரும்பினார். ஆனால் நிர்வாகத்தின் தரப்பு நான் விளையாடுவதை விரும்பவில்லை. இது இந்தியாவிற்கு எதிரான எனது கடைசி போட்டியாக இருக்க வேண்டும் என நினைத்தேன். 2011 உலகக் கோப்பையை பொறுத்தவரையில் இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டு அணிகளில் ஒன்று தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இருவரில் யார் என்பது முக்கியமில்லை. ஆனால் இரண்டில் ஒன்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி எங்களில் ஒருவர் இலங்கையை வீழ்த்த வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இரண்டு சமகால கிரிக்கெட் வீரர்களை ஒப்பிட்டு பேசியிருக்கும் இருவரும் விராட் கோலி எப்போதைக்குமான சிறந்த வீரர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். கோலி குறித்து பேசியிருக்கும் பஜ்ஜி, “விராட் கோலி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். பாபர் அந்த இடத்திற்கு செல்லவேண்டுமானால் இன்னும் உழைக்க வேண்டும். பாபரை பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிகளில் நம்பமுடியாத வீரராக ஜொலிக்கிறார். ஆனால் டி20யில் அது அப்படியே தலைகீழாக இருக்கிறது” என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
ஷோயப் அக்தர் கூறுகையில், “கோலி மிகச் சிறந்த வீரர். பாபர் அதற்கான முயற்சிகளில் சென்று கொண்டிருக்கிறார். மற்ற வடிவத்தில் அவருடைய ஸ்ட்ரைக்-ரேட் மட்டும் தான் தேவையற்ற விமர்சனங்களைப் பெறுகிறது” என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.