முடிவுக்கு வந்தது ”ஷாகிப் அல் ஹசனின்” உலகக்கோப்பை கனவு! முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்!

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு நடப்பு உலகக்கோப்பையிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது வங்கதேசம்.
Shakib Al Hasan
Shakib Al Hasanweb

ஓவ்வொரு நாட்டின் கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் உலகக்கோப்பை வெல்வது என்பது பெரிய கனவாகவே இருக்கும். தங்களுடைய நாட்டின் ஜாம்பவான் வீரர் ஒருவர் என்னதான் பல சாதனைகளை படைத்திருந்தாலும், அந்த வீரர் உலகக்கோப்பையை கையில் ஏந்துவதை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தன் நாட்டின் கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் உலக கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் ஆல்ரவுண்டராக வலம்வரும் ஷாகிப் அல் ஹசனுக்கும் உலகக்கோப்பையை வெல்வது என்பது பெரிய கனவாகவே இருந்தது.

Shakib Al Hasan
Shakib Al Hasan

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கும் முன்பும் சரி, நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும் சரி அவர் தங்களுடைய அணியை செமிபைனலில் கொண்டு சென்று நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் திடமாக இருந்தார். முன்னதாக பேசியிருந்த ஷாஹிப், “நாங்கள் வெறும் 4-5 போட்டிகளில் விளையாட இங்கு வரவில்லை, 9 அல்லது 11 போட்டிகளில் விளையாட வந்துள்ளோம். உலகக்கோப்பையையும், ஆசிய கோப்பையையும் வெல்லவேண்டும் என்பது தான் எங்களுடைய லட்சியமாக எப்போதும் இருந்துள்ளது. நடப்பு உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்களும் போராட தயாராக இருக்கிறோம்” என தனது உலகக்கோப்பை கனவு குறித்து தெரிவித்திருந்தார் ஷாகிப்.

பேட்டிங்கில் சொதப்பிய வங்கதேச வீரர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் களம்கண்ட வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரையே ஒரு அபாரமான ஓவராக வீசிய ஷாஹீன் அப்ரிடி, 5வது பந்தில் தன்ஷித் ஹாசனை 0 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு பிறகு களமிறங்கிய ஷண்டோவை 4 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றிய அஃப்ரிடி, 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை எடுத்துவந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஷாஹீன் ஒருபுறம் அற்புதமான ஸ்பெல்லை வீச, மறுமுனையில் பந்துவீச வந்த ஹாரிஸ் ராஃப் விக்கெட் கீப்பர் முஸ்ஃபிகுர் ரஹிமை 5 ரன்னில் வெளியேற்ற, வங்கதேச அணி 23 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Shaheen
Shaheen

என்னதான் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த லிட்டன் தாஸ் மற்றும் முஹமதுல்லா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுண்டரி சிக்சர்களாக விரட்டிய இந்த ஜோடி 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட 100 ரன்களை கடந்து நல்ல நிலைமையில் தான் இருந்தது வங்கதேச அணி. ஆனால் சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸை 45 ரன்னில் இஃப்திகார் அஹமது வெளியேற்ற, அரைசதமடித்து நிலைத்து நின்ற முஹமதுல்லாவை போல்டாக்கி வெளியேற்றினார் ஷாஹீன் அப்ரிடி.

Shakib Al Hasan
Shakib Al Hasan

ஸ்டார் பேட்டர்களை இழந்த வங்கதேசம் தடுமாற, அதற்கு பிறகு வந்த கேப்டன் ஷாகிப் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். ஆனால் ஷாகிப் அல் ஹசனை 43 ரன்னில் ஹாரிஸ் ராஃப் வெளியேற்ற, அடுத்து வந்த வீரர்களை தொடர்ச்சியாக 3 முறை போல்டாக்கி அனுப்பிய வாசிம் வங்கதேச அணியின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!

205 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஓப்பனர்கள் அப்துல்லா மற்றும் ஃபகர் ஷமான் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடிக்க முதல் விக்கெட்டுக்கே 126 ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான் அணி. நடப்பு உலகக்கோப்பை தொடர் முழுக்க சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் அப்துல்லா 4வது அரைசதம் அடித்து, 68 ரன்னில் வெளியேறினார்.

Fakhar Zaman
Fakhar Zaman

ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்ற ஃபகர் ஷமான் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பறக்கவிட்டு 81 ரன்கள் அடிக்க, 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 33வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் அணியாக வெளியேறிய வங்கதேசம்!

நடப்பு உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கும் வங்கதேச அணி, முதல் அணியாக அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தது.

Shakib Al Hasan
Shakib Al Hasan

மூத்த வீரர்களான ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஹமதுல்லா, முஸ்ஃபிகூர் ரஹிம், முஸ்தஃபிசூர் போன்ற வீரர்களின் கோப்பை கனவு கனவாகவே முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com