WIvsIND | மீண்டும் சொதப்பியது இந்தியா; மீண்டும் கேள்விக்குள்ளாகவும் இந்திய அணியின் செலக்ஷன்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. முதல் போட்டியில் தோற்றிருந்த நிலையில், கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த அணி மீண்டும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
WI vs IND
WI vs INDFIle images

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் (1-0) ஒருநாள் தொடரையும் (2-1) வென்ற இந்திய அணி, தற்போது சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. இருப்பினும் அந்தப் போட்டியில் நம்பர் 7குப் பிறகு சரியாக பேட்டிங் செய்யக் கூடிய வீரர்கள் இந்திய அணியில் இல்லாதது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி கயானாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். சிறு காயத்தால் அவதிப்பட்ட குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. அவருக்குப் பதில் ரவி பிஷ்னாய் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

2-0 என முன்னிலை பெற்ற விண்டீஸ் அணி!

இந்திய அணிக்கு எதிர்பார்த்ததைப் போல் நல்ல தொடக்கம் அமையவில்லை. சுப்மன் கில் 7 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் இஷன் கிஷன், திலக் வெர்மா இருவரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் போட்டியைப் போலவே இந்த ஆட்டத்திலும் எவ்வித பயமும் இல்லாமல் அதிரடியாக ஆடினார் திலக் வர்மா. 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர். அதன்பிறகு இந்திய அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் 20 ஓவர்களில் 152 ரன்களே எடுக்க முடிந்தது.

நிக்கோலஸ் பூரன்
நிக்கோலஸ் பூரன்

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் பிராண்டன் கிங், ஜேசன் சார்ல்ஸ் இருவரும் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பிறகு களமிறங்கிய நிகோலஸ் பூரண் தன்னுடைய சிறப்பான ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார். அதிரடியாக ஆடிய அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. அதனால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசஃப் இருவரும் நிதானமாக ஆடி அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் இணைந்து 26 ரன்கள் எடுக்க, 7 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ். 2-0 என இந்தத் தொடரிலும் முன்னிலை பெற்றது. இந்திய அணி இனி இந்தத் தொடரை வெல்லவேண்டுமெனில் மீதமிருக்கும் 3 போட்டிகளையும் வெல்லவேண்டும்.

சொதப்பிய வீரர்கள் தேர்வு!

முதல் போட்டியில் இந்திய டெய்லின் பேட்டிங் திறன் கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்தியாவின் பௌலிங் ஆப்ஷன்களே விவாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சஹால், பிஷ்னாய் என இரண்டு லெக் ஸ்பின் பௌலர்களோடு களமிறங்கியது. அவர்கள் போக அக்‌ஷர் படேலும் அணியில் இருந்தார். அணி முழுவதும் இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, இடது கை பேட்ஸ்மேன்களுக்குள் பந்துகளை எடுத்துச் செல்லும் மூன்று பௌலர்களோடு களமிறங்கியது இந்தியா.

அக்சர் பட்டேல்
அக்சர் பட்டேல்

இது அந்தப் போட்டியில் இந்திய அணிக்குப் பெரும் பிரச்னையாக அமைந்தது. பூரண், ஹிட்மேயர் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி மெல்ல ஆட்டத்துக்குள் நுழைந்தது. இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அக்‌ஷர் படேலை ஹர்திக் பாண்டியா பந்துவீச அழைத்துவரவேயில்லை. அதனால் வெறும் ஐந்து பௌலர்களை மட்டும் அவர் பயன்படுத்தினார். அது இந்திய அணிக்குப் பெரிய அளவில் உதவவில்லை. அதனால் இந்திய அணி தேர்வு விமர்சனத்துக்குள்ளானது.

குவாலிட்டி ஸ்பின்னர்களை ஓரங்கட்டுகிறதா இந்தியா?

பிளேயிங் லெவனில் என்றில்லை, இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய ஸ்குவாடிலேயே ஆஃப் ஸ்பின்னர்கள் யாரும் இல்லை. தொடருக்கான அணியைத் தேர்வு செய்யும்போதே தேர்வாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிறைந்திருக்கும் இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றி யோசித்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. வருண் சக்ரவர்த்தி போன்ற ஒரு ஸ்பின்னருக்கு ஒரு நல்ல ஐபிஎல் தொடருக்குப் பிறகும் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

Varun Chakravarthy
Varun Chakravarthy Swapan Mahapatra

வெஸ்ட் இண்டீஸ் என்றில்லை, பல்வேறு அணிகளிலும் இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்திருக்கின்றனர். ஆனால் இந்திய அணியில் சரியான ஆஃப் ஸ்பின் ஆப்ஷன் இல்லை எனும்போது, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக லெக் ஸ்பின்னர்களையோ, இடது கை ஸ்பின்னர்களையோ கேப்டன்கள் பயன்படுத்த யோசிக்கிறார்கள் எனும்போது... அணியின் தேர்வை யாரால் தான் புரிந்துகொள்ள முடியும்!

WI vs IND
தொடரை வென்றது இந்தியா.. ஆனால் எதிர்பார்த்த பதில்கள் கிடைத்ததா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com