
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது. வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி மும்பையிலும், நவம்பர் 16-ம் தேதி இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.
கோப்பைக்கான இறுதிப் போட்டியானது நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அகமதாபாத், சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, தர்மசாலா, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, புனே என மொத்தம் 10 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்திய அணி முதல் போட்டியில் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.
இந்திய அணியின் போட்டிகள் நடக்கும் தேதி மற்றும் விபரம்:
அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா - சென்னை
அக்டோபர் 11: இந்தியா vs ஆப்கானிஸ்தான் - டெல்லி
அக்டோபர் 15: இந்தியா vs பாகிஸ்தான் - அகமதாபாத்
அக்டோபர் 19: இந்தியா vs வங்கதேசம் - புனே
அக்டோபர் 22: இந்தியா vs நியூசிலாந்து - தர்மசாலா
அக்டோபர் 29: இந்தியா vs இங்கிலாந்து - லக்னோ
நவம்பர் 2: இந்தியா vs குவாலிஃபையர் 2 - மும்பை
நவம்பர் 5: இந்தியா vs தென்னாப்பிரிக்கா - கொல்கத்தா
நவம்பர் 11: இந்தியா vs குவாலிஃபையர் 1 - பெங்களூரு
உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற விரேந்தர் சேவாக், “விராட் கோலியும் சச்சினை போன்றே தனது கிரிக்கெட் வாழ்க்கையை பெரிய கோப்பையோடு முடிக்க வேண்டும். இந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால், இந்திய அணி கோப்பையை வெல்ல கோலி அனைத்தையும் செய்வார் கோலி” என்று கூறியுள்ளார்.
கோலி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் சேவாக், “நாங்கள் 2011 உலகக் கோப்பையை டெண்டுல்கருக்காக விளையாடினோம். கோப்பையை வென்றுகொடுத்தால், சச்சினுக்கு அதுவொரு சிறந்த விடைபெறுதலாக இருக்கும் என்று ஆடினோம். தற்போது விராட் கோலியும் அதே நிலைமையில் தான் இருக்கிறார். அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் கோலிக்காக இந்த கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “விராட் கோலியும் இந்த உலகக்கோப்பையைதான் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட 1,00,000 பேர் உங்களை பார்ப்பார்கள். அப்படிபட்ட சூழலில் எப்படி விளையாட வேண்டும், ஆடுகளம் எப்படி செயல்படும் என்று கோலிக்கு நன்றாகவே தெரியும். அவர் அதிக ரன்களை குவிப்பார். அவருடைய 100 சதவீத திறமையை வெளிக்கொண்டு வந்து கோப்பையை வெல்வதற்கான அனைத்தையும் செய்வார் என்று நம்புகிறேன்” என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.