”நடிக்காமலே ஹீரோ ஆயிட்டேன்..” ரசிகர்களின் அளவுகடந்த அன்பை கண்டு நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்!
30 வயது இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் 2015-ம் ஆண்டு சர்வதேச டி20 அறிமுகத்தை பெற்றபிறகு, 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் 2021-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகத்தை பெற்றார். இதற்கு இடைப்பட்ட காலங்களில் இந்திய அணிக்குள் உள்ளே வருவதுமாய், வெளியே செல்வதுமாய் இருந்த சஞ்சு சாம்சனுக்கு நிரந்தர வாய்ப்பு என்பது கிடைக்காமலே இருந்தது.
சிறந்த திறமையான வீரராக இருந்தபோதும் அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போது, இந்திய ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட தவறியதில்லை. ஒவ்வொரு முறை சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போதெல்லாம், பிசிசிஐயை விமர்சித்த ரசிகர்கள், மைதானத்திற்கும் நேரடியாக அவருடைய புகைப்படத்தை பதாகைகளில் கொண்டுசென்று ஆதரவை காட்டினர்.
கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக மாறியவரை சஞ்சு சாம்சனுக்கான நிரந்தர இடம் கிடைக்காத நிலையில், ரசிகர்கள் மற்றும் கவுதம் கம்பீரின் ஆதரவோடு தற்போது தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுவருகிறார் சஞ்சு சாம்சன்.
இந்நிலையில் ரசிகர்கள் தன்மீது காட்டும் அளவுக்கடந்த அன்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சஞ்சு.
நடிக்காமலே ஹீரோ ஆயிட்டேன்..
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் ‘குட்டி ஸ்டோரி’ என்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், ரசிகர்கள் தன்மீது காட்டும் அளவுகடந்த அன்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
ரசிகர்கள் உங்கமேல நிறைய லவ் காட்டுறாங்க, எப்படி அதை பார்க்குறீங்க என்ற அஸ்வினின் கேள்விக்கு பதிலளித்த சஞ்சு சாம்சன், “என்னுடைய கிரிக்கெட் பயணம் டெல்லி தெருக்களிலும், திருவனந்தபுரம் தெருக்களிலும், விழிஞ்சம் கடற்கரையிலும் தான் தொடங்கியது. அதற்குபிறகு ஏன் நான் ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக மாறக்கூடாது என்ற கனவு எனக்குள்ளே தோன்றியது. அங்கிருந்து தொடங்கிய என் பயணத்தில் ரசிகர்கள் காட்டிய ஆதரவு என்பது மிகப்பெரியதாக இருந்தது.
திருவனந்தபுரத்தில் நான் கிரவுண்டிற்குள் நுழைந்த போது ‘சஞ்சு சஞ்சு’ என்ற கோஷங்கள் எழுந்ததை பார்க்கும்போது ’எனக்காகவா, இது கொஞ்சம் ஓவரால்ல இருக்கு’ என்று தோன்றியது. ரசிகர்களின் இவ்வளவு அன்பும், ஆதரவும் நான் எதிர்ப்பார்க்காத ஒன்று. எனக்காக ஆதரவு கேரளாவில் கிடைப்பது இயல்பு தான் என்றாலும், வெளிநாட்டில் நியூசிலாந்தில் விளையாடும்போதும் ரசிகர்களிடமிருந்து அன்பு வெளிப்பட்டது.
நியூசிலாந்திலும் நான் கிரிக்கெட் ஆடவில்லை, இந்திய அணியுடன் இருந்தேன். ஆனால் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ரசிகர்கள் என்னுடைய புகைப்படம் கொண்ட பதாகைகளை வைத்திருந்தனர். அதைபார்க்கும் போது ‘நடிக்காமலே ஹீரோ ஆயிட்டன்’ என்பது போல இருந்தது. அதற்குபிறகு ரசிகர்களின் காட்டும் அன்புக்காகவே என் விளையாட்டில் நேர்மையாகவும், சிறப்பாகவும் விளையாட வேண்டும் என்று தோன்றியது” என தெரிவித்துள்ளார்.