ஆஸி. உலகக்கோப்பை.. தொடர்ச்சியாக மறுக்கப்படும் வாய்ப்புகள்.. சாம்சன் போட்ட FB பதிவு! ரசிகர்கள் வேதனை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பெயர் இல்லாத நிலையில் சஞ்சு சாம்சன் போட்டிருக்கும் பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.
Sanju Samson
Sanju SamsonPT

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில், அதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ODI தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். அக்சர் பட்டேல் காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இல்லாதது மீண்டும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா போன்ற வீரர்களின் பெயர் இடம்பெற்றிருந்த போதும், சஞ்சுவின் பெயர் ஏம் இடம்பெறவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் சஞ்சுவிற்காக வேதனை பதிவுகளை பகிர்ந்துவரும் நிலையில், இர்ஃபான் பதான், ராபின் உத்தப்பா போன்ற முன்னாள் வீரர்களும் சஞ்சுவிற்காக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

சஞ்சுவின் இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன்! - இர்ஃபான் பதான்

சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து பதிவிட்டிருக்கும் இர்ஃபான் பதான், “சஞ்சு சாம்சன் இடத்தில் நான் இருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைவேன்” என்றும், ராபின் உத்தப்பா “சஞ்சு சாம்சனின் இடத்தில் யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள்” என்றும் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு சஞ்சு சாம்சன் பதிவிட்டிருக்கும் பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இத்தனை மறுப்பிற்கு பிறகும் சாம்சன் “சிரிக்கும் ஸ்மைலியை” பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவை ரசிகர்கள் பகிர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.

கவுண்டி வாய்ப்பு - ஆசிய கோப்பை - ஆசிய போட்டிகள் - ஆஸ்திரேலியா தொடர்!

கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பையில் ரிசர்வ் வீரராக சென்றார் சஞ்சு சாம்சன். முதலிரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் இல்லாத போது பேக்கப் வீரராக சென்ற சஞ்சுவிற்கு, ராகுல் ஃபிட்டாகி திரும்பியதால் அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போனது. பின்னர் அவர் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பினார். ஆசியக்கோப்பையில் பங்கேற்றதால் ஆசிய கேம்ஸ்களில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலும் இடம்பெற முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் சாம்சனின் பெயர் இடம்பெறவில்லை. மூன்று பக்கமும் ஒன்றன் பின் ஒன்றாக அடித்த இந்த வாழ்க்கையை நினைத்து “சிரித்து பதிவிட்டாரோ என்னவோ”. உண்மையாகவே சஞ்சுவின் இடத்தில் தற்போது யாராலும் இருக்க முடியாது என்பதே நிதர்சனம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com