ENG vs IND| டெஸ்ட்டில் அறிமுகமானார் சாய் சுதர்சன்.. இந்தியா பேட்டிங்.. ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 18 வருடங்களாக இவ்விரு அணிகளும் மோதும் தொடருக்கு வழங்கப்பட்டுவந்த ’பட்டோடி டிராபி’ நிறுத்தப்பட்டு தற்போது ’ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கோப்பையே இனி இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோப்பையை ஆண்டர்சன் மற்றும் டெண்டுல்கர் இருவரும் நேற்று அறிமுகம் செய்துவைத்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து - இந்தியா இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது இன்று இங்கிலாந்து லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்துக்கு இரண்டு அணி வீரர்களும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
டெஸ்ட் கேப் பெற்றார் சாய் சுதர்சன்..
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன்.
உள்ளூர் கிரிக்கெட் மட்டுமில்லாமல், கவுண்ட்டி போட்டிகளிலும் பங்கேற்று நல்ல ஃபார்மை வெளிப்படுத்திய சாய் சுதர்சனுக்கு இந்திய அணிக்கான டெஸ்ட் கேப் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கான டெஸ்ட் கேப்பை இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா வழங்கினார். சாய் சுதர்சன் இந்திய அணிக்காக புஜாரா விளையாடி வந்த நம்பர் 3 இடத்தில் விளையாடவிருக்கிறார்.
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 26 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். கே.எல்.ராகுல் 18 பந்துகளில் 7 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா