2 கைகளும் இல்லை: கழுத்தால் பேட்டிங்; காலால் பவுலிங்.. சச்சினை கவர்ந்த கிரிக்.வீரர்; யார் இந்த அமீர்?

2 கைகளை இழந்த காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை சந்தித்த சச்சின், பேட் ஒன்றை பரிசளித்தார்.
சச்சின் டெண்டுல்கர், அமீர்
சச்சின் டெண்டுல்கர், அமீர்ட்விட்டர்

ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைன். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. தன்னுடைய இரண்டு கைகளையும் இவர் இழந்திருந்தாலும், கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவருடைய வீடியோ சமீபத்தில் வைரலானது.

அந்த வீடியோவைப் பார்த்த பிறகு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுகல்கர் அவருக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில், சச்சினை தாம் சந்திக்க விரும்புவதாக அமீர் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

யார் இந்த அமீர் ஹூசைன்?

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு தெற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாகமா கிராமமே அமீரின் ஹூசைனின் சொந்த ஊராகும். இந்த வாகமா கிராமத்தில்தான் புகழ்பெற்ற காஷ்மீரி வில்லோ மரங்களைக் கொண்டு பேட் செய்யப்படுகிறது. இதனால் இந்த கிராமம் உலக அளவில் பெயர்பெற்றது. அமீர் ஹூசைன் பிறப்பால் மாற்றுத்திறனாளி இல்லை. ஆனால், எதிர்பாராத விபத்து ஒன்று, அவரது வாழ்வில் ஏற்பட்ட பிறகு அவர் வாழ்வையே மாற்றியது. அமீரின் அப்பா, சொந்தமாக மரம் மில் ஒன்று வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அதில் அமீரின் மூத்த சகோதரரும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் அமீருக்கு 8 வயது இருந்தபோது, அவர்களுக்கு மதிய உணவு கொண்டுசென்றுள்ளார், அமீர். அப்போது எதிர்பாராத விபத்தில் அந்த மிஷினுக்குள் சிக்கிக் கொண்டார், அமீர். பின்னர் ராணுவ உதவியுடன் மீட்கப்பட்ட அவர், அந்த விபத்தில் இருந்து குணமடைய அவருக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்த விபத்தில்தான் அவர் தன்னுடைய 2 கைகளையும் இழந்தார். மகனின் விபத்துக்குப் பிறகு அந்த மில்லையே விற்றுவிட்டார் அமீரின் தந்தை.

பாட்டி கற்றுத் தந்த பாடம்

அதேநேரத்தில், கைகளை அமீர் இழந்தாலும் தன்னம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. காரணம், அவருக்கு அவரது பாட்டி மிகவும் உறுதுணையாக இருந்தார். பாட்டியின் மரணத்திற்குப் பிறகு அவர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. அதையெல்லாம் பாட்டி கற்றுக் கொடுத்த பாடங்கள் மூலம் சிறப்பாகவே கையாண்டார். ஆயினும், சிறுவயது முதல் நேசித்த கிரிக்கெட்டை விளையாட முடியவில்லையே என்ற வருத்தம் அவரை எப்போதும் வாட்டிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில்தான் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அவரது கிரிக்கெட் பேரார்வத்தைக் கண்டுபிடித்து பாரா கிரிக்கெட்டில் சேர்த்துவிட்டார்.

தளராத நம்பிக்கையும் தடைகளை உடைக்கும் திறமையும் இருந்தால், வானத்தைக்கூட வளைத்துப் பிடிக்கலாம் என்பதற்கு உதாரணமாய் அவருடைய பயிற்சிகள் அவருக்கு ஊக்கத்தைப் பெற்றுத் தந்தன; உற்சாகத்தை அள்ளித் தந்தன. பல முயற்சிகளுக்குப் பிறகு கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையே பேட்டை வைத்து பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் பயிற்சி பெற்றார். எல்லாவற்றுக்கும் முயற்சி இருந்தால்தானே வெற்றி கிடைக்கும். அதைத்தான் அமீரும் செய்துள்ளார். அதுபோல், கால்விரல்களில் பந்தைப் பிடித்து பேட்டர்களுக்கு வீசுவதிலும் பயிற்சி பெற்றார்.

’சச்சினே தன்  ரோல் மாடல்’ - அமீர்

தற்போது இந்த முறையில்தான் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் வசீகரித்து வருகிறார். அவருடைய இந்த வீடியோதான் சமீபத்தில் வைரலானது. மேலும், அவருடைய இந்த கிரிக்கெட் தாகம்தான் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் வியப்படையச் செய்ததுடன், இன்று அவர் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்று வியப்படைய வைத்துள்ளது. அவருடைய கடுமையான போராட்டம் காஷ்மீரின் பள்ளத்தாக்கு எங்கும் அவர் பெயரைக் கொண்டுசென்றிருக்கிறது.

கூடவே, ஜம்மு - காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் உயரச் செய்தது. தன்னைப் போலவே இதேபோன்று அப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என எண்ணம் கொண்டு அதற்காக உழைத்தும் வருகிறார், அமீர். சச்சினின் தீவிர ரசிகரான அமீர், அவரே தம் ரோல்மாடல் என்கிறார். அவரைப் போலவே இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாட விரும்புவதே அவரது ஆசையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com