சிவன் வடிவில் உருவாகும் கிரிக்கெட் மைதானம்: Namo என எழுதப்பட்ட ஜெர்சியை மோடிக்கு வழங்கினார் சச்சின்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.451 கோடியில் நவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவிருக்கும் நிலையில், இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
சச்சின் - மோடி
சச்சின் - மோடிTwitter

2025 டிசம்பரில் கட்டி முடிக்கப்படும் வகையில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது. வாரணாசியில் உள்ள ராஜதலாப், கஞ்சாரியில் ரூ.451 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த மைதானத்திற்கு இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன்கள் மற்றும் ஜாம்பவான் வீரர்களான கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, திலீப் வெங்சர்க்கார், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முழுக்க முழுக்க சிவன் கருப்பொருள்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த மைதானத்திற்கு உத்தரப் பிரதேச அரசு ரூ.121 கோடியை நிலத்திற்காக செலவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மைதானத்தின் கட்டுமானத்திற்காக ரூ.330 கோடி செலவிடுகிறது.

கிரிக்கெட் மூலம் உலகம் இந்தியாவுடன் இணைந்துள்ளது!- அடிக்கல் நாட்டு விழாவில் மோடி

சிவமயமாக உருவாக்கப்படும் புதிய கிரிக்கெட் மைதான அடிக்கல் நாட்டு விழா குறித்து சமூக வலைதளத்தில் பேசியிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த நிகழ்வை "காசி வரலாற்றில் ஒரு பொற்கால அத்தியாயம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று விமானம் மூலம் வாரணாசி வந்தடைந்த பிரதமர் மோடி, மதியம் 1:30 மணியளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இன்று வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இது பூர்வாஞ்சல் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். கிரிக்கெட் மூலம் உலகம் முழுவதும் இந்தியாவுடன் இணைந்துள்ளது. புதிய நாடுகள் கூட இப்போது கிரிக்கெட் விளையாட முன்வருகின்றன” என பேசினார்.

சிவன் வடிவில் உருவாகும் வாரணாசி மைதானம்!

31 ஏக்கர் பரப்பளவில் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்படவுள்ள வாரணாசி மைதானம், இந்துக்கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு முழுவதும் உருவாக்கப்பட உள்ளது. திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்களும், உடுக்கை வடிவிலான மையப் பகுதியும், பிறை நிலா வடிவிலான மேற்கூரையும், வாரணாசியின் மலைத்தொடர்களின் படிகளை ஒத்த பார்வையாளர்களின் கேலரி என முழுக்க சிவனை அடிப்படையாக கொண்டு அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

varanasi Cricket Stadium Model
varanasi Cricket Stadium ModelTwitter

மேலும் இந்த மைதானத்தில் மொத்தமாக 7 பிட்ச்கள், வீரர்களுக்கான பயிற்சிக் கூடங்கள், பயிற்சி மைதானங்கள், ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்புக் கூடங்கள், விஐபி பாக்ஸ் என்று அனைத்து வசதிகளும் அமைக்கப்படவுள்ளன.

“NAMO” என எழுதப்பட்ட ஜெர்சியை வழங்கிய சச்சின்!

அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர் பிரதமர் மோடிக்கு மூவர்ண கொடி பொறித்த சமீபத்திய இந்திய கிரிக்கெட் ஜெர்சியை வழங்கினார். அந்த ஜெர்சியின் பின்பக்கத்தில் “Namo" என்ற பெயர் பொறிக்கப்பட்டு நம்பர் “1” என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தது.

அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிறகு முன்னாள் கிரிக்கெட் ஜாம்வான்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, திலீப் வெங்சர்க்காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படைத்தை பகிர்ந்துள்ள சச்சின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஒருவரை பார்த்து அவரை போற்றும் வகையில் வளர்ந்து, மற்ற இருவருடனும் களத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது நெகிழ்ச்சியான ஒன்று. கிரிக்கெட்டில் அவர்கள் 1983 உலகக்கோப்பை வெற்றியின் மூலம் அடித்தளம் அமைத்தார்கள், நான் அதே மகிழ்ச்சியை 2011-ல் அனுபவித்தேன்! தற்போதைய அணி அதை 2023-ல் வீட்டிற்கு கொண்டு வரும் என்று நம்புகிறோம்” என சச்சின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com