பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் தோல்வி.. சூர்யவன்ஷி-ஜெய்ஸ்வால் அதிரடியால் RR வெற்றி!
2026 ஐபிஎல் தொடரில் ஏழு போட்டிகளில் அபார வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் தோல்வியை பரிசளித்தது. ஸ்ரேயாஸ் ஐயர்-ரிக்கி பாண்டிங் கூட்டணியின் தந்திரத்தையும் மீறி, 223 ரன்கள் என்ற கடின இலக்கை சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், ஃபெரேரா, ஷுபம் துபே ஆகியோரின் அதிரடி பேட்டிங் மூலம் RR 19.2 ஓவரில் வென்றது.
2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸை, கேப்டனாக அற்புதமாக வழிநடத்திவருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.
சேஸிங் என்றாலும் சரி, ஸ்கோரை டிஃபண்ட் செய்வதென்றாலும் சரி பவுலர்களை எப்படி கையாள்வது, எந்த பேட்ஸ்மேனை எந்த இடத்தில் களமிறக்குவது, போட்டிக்கு இடையில் சரியான முடிவுகளை எடுப்பது என கேப்டனாக மிளிர்ந்துவருகிறார் ஸ்ரேயாஸ்.
சிறந்த கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் காம்போவில் புல்லட் ட்ரெய்ன் போல சென்றுகொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸை யார் தோற்கடிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவந்தது. இந்தசூழலில் தான் பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
பஞ்சாப் கிங்ஸுக்கு முதல் தோல்வி..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் அதிரடி தொடக்கம் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸின் கடைசிநேர அதிரடி பேட்டிங்கால் 20 ஓவரில் 222 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்டொய்னிஸ் 62 ரன்கள் மற்றும் பிரப்சிம்ரன் 59 ரன்கள் அடித்தனர்.
223 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 5 சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யவன்ஷி 43 ரன்னில் அவுட்டாக, 7 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஜெய்ஸ்வால் அரைசதமடித்து வெளியேறினார்.
அடுத்தடுத்து வந்த வீரர்களும் அதிரடி காட்ட 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஃபெரேரா மற்றும் ஷுபம் துபே இருவரும் 52, 31 ரன்கள் அடிக்க 19.2 ஓவரில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது.

