கோத்துவிட்ட விராட் கோலி.. குறி வைக்கப்பட்ட ரோகித் சர்மா.. நியூசிலாந்தில் சம்பவம்!
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றிய நிலையில் அடுத்து 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வலைப்பயிற்சியின்போது சுவையான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இந்திய வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் ரோஹித்திற்கும் விராட் கோலிக்கும் பந்துவீசி உள்ளனர். அப்போது இந்திய வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் முதலில் ரோஹித்திடம் அவருடைய மட்டைகளில் ஒன்றை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால், ரோகித் சர்மா அதற்கு நோ சொல்லிவிட்டார். பின்னர் அவர்கள் கோலியிடம் சென்றுள்ளனர். அவரோ, தம்மிடம் போதுமான அளவுகொண்ட மட்டைகள் மட்டுமே இருப்பதாகவும், தன்னைவிட ரோகித்திடம்தான் அதிக மட்டைகள் இருப்பதாகவும் விளையாட்டுத்தனமாகக் கூறியுள்ளார். மேலும், விராட் கோலி, “எங்கள் இருவரில் யாரிடம் அதிக மட்டைகள் இருக்கிறதோ, அவர் ஒரு வலைப்பயிற்சி பந்துவீச்சாளருக்கு ஒன்றை கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்த ரோகித், “எல்லாரும் என்னையே குறி வைக்கிறாங்களே” எனச் சொல்ல அந்த இடத்தில் மேலும் சிரிப்பு அலை எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பயிற்சி சூழலும் மகிழ்ச்சியாக மாறியுள்ளது.

