MI அணி மீதான கடுப்பில் கமெண்ட் செய்த ரோகித் மனைவி ரித்திகா! டெலிட் செய்யப்பட்ட வீடியோ! என்ன நடந்தது?

ரோகித் சர்மா கேப்டன்சியின் காரணமாக பேட்டிங்கில் சொதப்பிவருவதால் தான் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக மார்க் பவுச்சர் கூறிய வீடியோவில், ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
rohit ritika - mark boucher
rohit ritika - mark boucherweb

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக ரோகித் சர்மா இருக்கும் நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித்தை நீக்கி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமித்துள்ளது MI நிர்வாகம். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்காத வரை, 2008 முதல் 2012 வரையிலான 5 ஐபிஎல் சீசன்களில் ஒன்றில் கூட மும்பை அணியால் கோப்பை வெல்லமுடியவில்லை. மாறாக MI கேப்டனாக மாறிய ரோகித் சர்மா, பலம் வாய்ந்த அணியாக வலம்வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாக்அவுட்டில் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல்லில் முதல் 5 கோப்பைகளை வென்ற அணியாக மும்பை அணியை மிளிரச்செய்தார்.

இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டதிலிருந்தே, மும்பை அணி மீது ஹிட்மேனின் ரசிகர்கள் அதிக கோவத்துடன் இருந்து வருகின்றனர். தங்களின் ஆதர்ச நாயகன் கேப்டனாக செயல்பட முடியாததால் அதிருப்தியடைந்த ரோகித் ரசிகர்கள் MI அணியை UNFollow செய்தும், எக்ஸ் தளத்தில் எம்ஐ மீதான வெறுப்பை டிரெண்டிங்கில் வைத்தும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் ஒரு வீடியோவில் பேசியிருக்கும் மும்பை தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ரோகித் சர்மா கேப்டன்சி நீக்கம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சார்ந்தது என்றும், இனி பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். பவுச்சரின் அந்த வீடியோவை பார்த்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா அதில் பெரும்பாலானவை தவறு என கூறி கமெண்ட் செய்ததால் விவகாரம் விஸ்வரூபமானது.

மார்க் பவுச்சர் கூறியது என்ன?

ஸ்மாஸ் ஸ்டார் உடனான போட்காஸ்ட்டில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மாற்றம் குறித்து பேசியிருக்கும் பவுச்சர், “இது முற்றிலும் கிரிக்கெட் சார்ந்த முடிவு. முதலில் நாங்கள் ஹர்திக்கை மீண்டும் வீரராகப் பெறுவதற்கான வழியைப் பார்த்தோம். என்னைப் பொறுத்தவரை அணியில் இது ஒரு மாற்றத்திற்கான நேரம். இது இந்தியாவில் நிறைய பேருக்கு புரியவில்லை, மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் உணர்ச்சிகளை விலக்கிவிட்டு பார்க்கவேண்டும். இது ஒரு கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட முடிவு என்று நான் நினைக்கிறேன்.

mark boucher
mark boucher

ரோகித் கடந்த சீசன்களாக ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படவில்லை. இந்த முடிவால் ரோகித் ஒரு வீரராக சிறப்பாக செயல்படுவார். ஃபிரியாக சென்று நல்ல ரன்களை அவரால் அடிக்க முடியும். மொத்த மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நாங்கள் பேசும்போது, ரோகித்துக்கு ஒரு வீரராக அடியெடுத்து வைப்பதற்கான வாய்ப்பு இதுவாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். கேப்டனாக இருக்க வேண்டும் என்ற ஆரவாரம் இல்லாமல் வெளியே சென்று ரசிக்க அவருக்கு பெரிய மதிப்பு கிடைத்தது என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கப் போகிறார். அதனால் ​​ஒரு கேப்டனாக அவருக்கு இருக்கும் அந்த கூடுதல் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தோம். இந்த முடிவின் மூலம் ரோகித் சர்மா சிறந்த பலனைப் பெறலாம்” என்று அவர் கூறினார்.

கோவத்தை வெளிப்படுத்திய ரோகித் மனைவி!

மார்க் பவுச்சர் பேசிய வீடியோவை பார்த்த ரோகித்தின் மனைவி ரித்திகா, கடுப்புடன் அந்த வீடியோவிலேயே கமெண்ட்டை பதிவுசெய்தார். அதில் “இந்த கருத்தில் பெரும்பாலானவை தவறு” என்று கமெண்ட் செய்தார்.

Smash Sports Instagram
Smash Sports Instagram

இதற்கு முன்பு ஒரு கேப்டனாக ரோகித்திற்கு வீடியோ டெடிகேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவில், “மஞ்சள் நிறத்திலான இதயம்” கமெண்ட் செய்திருந்தார் ரித்திகா. இதன்மூலம் ரோகித் சர்மாவின் குடும்பம் மும்பை இந்தியன்ஸ் அணி மீது கோபத்தில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. ரித்திகாவின் இந்த கமெண்ட்டால் மீண்டும் மும்பை அணியை ரசிகர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.

ரித்திகா கமெண்ட்டால் டெலிட் செய்யப்பட்ட வீடியோ!

ரித்திக்காவின் கமெண்ட்டால் மார்க் பவுச்சர் பேசிய வீடியோ வைரலான நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோ ஸ்மாஸ் ஸ்போர்ஸால் நீக்கப்பட்டதாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். ரசிகர்கள் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com