'The Real Inspiration..’ புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா ஸ்டாண்ட் திறப்பு!
உலக கிரிக்கெட்டில் அதிகமுறை ODI இரட்டை சதங்கள் அடித்த வீரராகவும், 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுகொடுத்த இந்திய கேப்டனாகவும் வலம்வரும் ரோகித் சர்மாவை கௌரவிக்கும் விதமாக புகழ்மிக்க மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டேண்ட் திறக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் தலைமை தாங்க ரோகித் சர்மாவின் பெற்றோர் ரோகித் சர்மாவின் ஸ்டேண்டை திறந்துவைத்தனர்.
ரோகித் சர்மா ஸ்டாண்ட் திறப்பு..
மும்பை கிரிக்கெட் சங்கமானது மே 16-ம் தேதியான இன்று புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, அஜித் வடேகர் பெயரிலும், போற்றக்கூடிய நிர்வாகியாக செயல்பட்ட ஷரத் பவார் பெயரிலும் என 3 ஸ்டாண்டுகளைத் திறந்து வைக்கும் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்தியது.
இந்த நிகழ்வு முதலில் மே 13ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்பட்டது.
ரோகித் சர்மா - இந்தியாவின் தற்போதைய ஒருநாள் கேப்டன் மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்த கேப்டனுமான ரோகித் சர்மாவின் அற்புதமான தலைமைத்துவத்தை கௌரவிக்கும் வகையில், திவேச்சா பெவிலியன் லெவல் 3 ரோஹித் சர்மா ஸ்டாண்ட் என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ பெயர் பலகை ஒரு துணியின் கீழ் மறைக்கப்பட்டு, சம்பிரதாய முறைப்படி வெளிப்படுத்தப்பட்டது.
அஜித் வடேகர் - 1971 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் இந்தியாவை முதன்முறையாகத் தொடர் வெற்றிகளுக்கு அழைத்துச் சென்று வரலாறு படைத்த இந்திய கேப்டன் அஜித் வடேகர், இது இந்திய கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை மறுவரையறை செய்ய உதவிய ஒரு மைல்கல் சாதனையாகும். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் 2018-ல் தனது 77வது வயதில் காலமானார்.
ஷரத் பவார் - 2001 முதல் 2016 வரை மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (MCA) தலைவராகப் பணியாற்றிய ஷரத் பவார், அதன் வழிகாட்டும் சக்தியாகக் கருதப்படுகிறார். அவரது பதவிக் காலத்தில், மும்பையின் வான்கடே மைதானம் 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.