"இதுதான் கடைசிப் போட்டி.. உடனே லண்டனுக்கு வாங்க..” பெற்றோருக்கு செய்தியனுப்பிய ரோகித் சர்மா!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரோகித் சர்மா தனது கடைசி ஆட்டத்தை நேரில் காண அவரது பெற்றோருக்கு அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் ‘ஹிட் மேன்’ என அழைக்கப்படும் ரோஹித் சர்மா எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். தவிர, உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன்கள் வரிசையிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகக்கோப்பை வென்று தந்ததற்குப் பிறகு, அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதேநேரத்தில், அடுத்த உலகக்கோப்பைக்குக் கவனம் செலுத்தும் நோக்கில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா, முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கவில்லை. இது, ரசிகர்களுக்கும் பிசிசிஐக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இதற்கிடையே, 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தத் தொடருக்குப் பிறகு ரோகித் அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தகவல் தேர்வுக் குழுவினரால் அவரிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூலை 19 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து 3ஆவது ஒருநாள் போட்டியே ரோகித் சர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கடைசி சர்வதேச ஆட்டத்தை மைதானத்தில் இருந்து காணுமாறு தனது பெற்றோருக்கு ரோகித் அழைப்பு விடுத்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள், லார்ட்ஸ் மைதானத்தின் கேலரியில் அமர்ந்து போட்டியை நேரில் பார்ப்பதற்கும், தங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ரோகித்தே முன்னின்று செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

